கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா – 2026: நெடுந்தீவில் அதிகாரிகளின் முன்னாயத்தக் கூட்டம்!
கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல வருடாந்த திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுடனான முன்னாயத்த கூட்டம் பிரதேச செயலர் என். பிரபாகரன் தலைமையில் நெடுந்தீவு பிரதேசசெயலக மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
கடந்த வருட திருவிழாவின்போது இனங்காணப்பட்ட குறைபாடுகள் தொடர்பாகவும் இவ்வருட திருவிழாவில் மேற்கொள்ளப்படவேண்டிய பணிகள் தொடர்பிலும் இதன்போது ஆராயாடப்பட்டது.
இம் மாதத்தின் நடுப்பகுதியில் முன்னாயத்த பணிகள் தொடர்பில் ஆராய்வதற்காக துறைசார் அதிகாரிகளுடன் கச்சதீவிற்கான பயணத்தை தாம் மேற்கொள்ளவுள்ளதாகவும், அதன்பின்னர் யாழ். மாவட்ட செயலர் தலைமையிலான கூட்டம் மாவட்டசெயலகத்தில் இடம்பெற்று பணிப்பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகவும் இதன்போது தெரிவித்தார்.
இந்திய – இலங்கை பக்தர்களின் நலனுக்காக அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஒவ்வொரு வருடமும் அர்பணிப்புடன் செயற்பட்டுவருவதை பாராட்டி, இவ்வருடமும் அனைவரும் ஒன்றிணைந்து வினைத்திறனுடன் பணியாற்ற அழைப்புவிடுப்பதாகவும் கருத்து தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலில் உதவி பிரதேசசெயலர், நெடுந்தீவு கடற்படையின் கட்டளை அதிகாரி மற்றும் பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்
கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல வருடாந்த திருவிழாவானது பெப்ரவரி மாதம் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


