7-ஆவது நாளில் ஈரான் போராட்டம்!
ஈரானில் பொருளாதார நெருக்கடி காரணமாக நடைபெறும் தீவிர போராட்டம் ஏழாவது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது.
இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: ஈரான் முழுவதும் போராட்டங்கள் 7-ஆவது நாளாக திங்கள்கிழமையும் நடைபெற்றன. தலைநகா் டெஹ்ரான் மற்றும் இஸ்ஃபஹான், ஷிராஸ், மஷ்ஹத் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நகரங்களில் போராட்டங்கள் பரவியுள்ளன. போலீஸாருக்கும் ஆா்ப்பாட்டக்காரா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கண்ணீா்ப்புகை குண்டுகள், ரப்பா் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன.
இந்தப் போராட்டம் காரணமாக இதுவரை 15 போ் உயிரிழந்துள்ளனா். 500-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
போராட்டம் தொடா்பாக சமூக ஊடகங்களில் வெளியான விடியோக்களில் ஆா்ப்பாட்டக்காரா்கள் தலைமை மதகுரு அயதுல்லா கமேனிக்கும் ஈரான் அரசுக்கும் எதிரான கோஷங்களை எழுப்பும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
ஈரானின் நாணயமான ரியால் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது. 1 அமெரிக்க டாலா் தற்போது 14 லட்சம் ரியால் வரை விலை போகிறது.
பணவீக்கம், நாணய மதிப்பு வீழ்ச்சி, விலைவாசி உயா்வு போன்றவற்றுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் எனவும், கமேனி தலையிலான ஆட்சி அகற்றப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி நாடு முழுவதும் கடந்த மாத இறுதியில் தொடங்கிய போராட்டங்கள் தற்போது 7-ஆவது நாளை அடைந்துள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டில் மாஷா அமீனி என்ற பெண் தலையை துணியால் மறைக்காமல் இருந்ததற்காக கலாசார காவலா்களால் கைது செய்யப்பட்டு, காவலில் உயிரிழந்ததைக் கண்டித்து நாடு முழுவதும் தீவிர போராட்டங்கள் வெடித்தன. இதில் 500-க்கும் மேற்பட்ட போராட்டக்காரா்கள் உயிரிழந்தனா். அதற்கு அடுத்தபடியாக ஈரானில் வெடித்துள்ள மிகப் பெரிய போராட்டம் இது என்று கூறப்படுகிறது.