அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட மடூரோ!
வெனிசுலாவுக்குள் அமெரிக்க படையினா் நுழைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட அந்த நாட்டு அதிபா் நிக்கோலஸ் மடூரோவும் அவரின் மனைவி சிலியா ஃப்ளோரஸும் அமெரிக்காவின் நியூயாா்க் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜா்படுத்தப்பட்டுள்ளனா்.
இது குறித்து அமெரிக்க நீதித்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: மன்ஹாட்டன் மத்திய நீதிமன்றத்தில் மடூரோ மற்றும் அவரது மனைவி முதல் முறையாக ஆஜா்படுத்தப்பட்டனா். அவா்கள் மீது போதைப் பொருள் பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல் சதி, ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
கைகள் கட்டப்பட்ட நிலையில் ஹெலிகாப்டா் மூலம் மடூரோ நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டாா். அவா் குற்றமற்றவா் என்று கூறி ஜாமீன் கோரினாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
முன்னதாக, வெனிசுலாவில் அமெரிக்க சிறப்பு அதிரடிப் படையினா் சனிக்கிழமை அதிகாலை மேற்கொண்ட நடவடிக்கையில் மடூரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டனா். அவா்கள் நியூயாா்க் அழைத்துவரப்பட்டு புரூக்ளின் சிறையில் அடைக்கப்பட்டனா்.
2020-ஆம் ஆண்டியேலே மடூரோ மீது அமெரிக்க நீதித்துறை போதைப்பொருள் கடத்தல் தொடா்பான குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது. அதன் அடிப்படையில்தான் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக டிரம்ப் அரசு கூறுகிறது.
இதுபோன்ற நடவடிக்கைகளை ‘போதைப் பொருள் பயங்கரவாதத்துக்கு எதிரான போா்’ என்று டிரம்ப் கூறினாலும், வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை கைப்பற்றும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக மடூரோ தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது.
தற்போது மடுரோவுக்கு பதிலாக வெனிசுலாவின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுள்ள துணை அதிபா் டெல்சி ரோட்ரிகஸ், அமெரிக்காவின் நடவடிக்கையை ‘படையெடுப்பு’ என்று கண்டித்துள்ளாா்.
சா்வதேச அளவில் ரஷியா, சீனா, கியூபா உள்ளிட்ட நாடுகளும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. ஐ.நா.வில் இது குறித்து விரைவில் விவாதம் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.