;
Athirady Tamil News

வெற்றி வேண்டுமா…? எங்ககிட்ட வாங்க… கர்நாடக தேர்தல் களத்தை கலக்கும் பி.கே.பாய்ஸ் !!

0

தேர்தல் வந்துவிட்டாலே கள நிலவரம், மக்களின் மனநிலை, சர்வேக்கள் நடத்துவது, பிரசார வியூகம், சமூக வலைதளங்கள் என பல்வேறு விஷயங்களை கையாள வேண்டும். அதற்கு தேர்தல் வியூக நிறுவனங்களின் தேவை அவசியமானதாக பார்க்கப்படுகிறது. இதை தொடங்கி வைத்தது யார் என எண்ணி பார்த்தால் பிரசாந்த் கிஷோர் தான் நினைவிற்கு வருவார். தற்போது இவர் தேர்தல் வியூக நிபுணர் பதவியில் இருந்து ஓய்வுபெற்று விட்டு பீகார் மாநிலத்திற்கு சென்று விட்டார். அங்கு அரசியல் மாற்றம் ஏற்படுத்தும் வகையில் சில முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். ஆனால் இவரது நிறுவனம் செயல்பட்டு கொண்டு தான் இருக்கிறது. பிரசாந்த் கிஷோரிடம் பயிற்சி பெற்ற அவரது சீடர்கள் தற்போது அந்த பணியை செய்து வருகிறார்கள். தற்போது இவர்களை கர்நாடக அரசியல் கட்சிகள் குறி வைத்துள்ளன. மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க., தேசிய ஜனநாயக கூட்டணி கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சியை பிடித்த போது அதன் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது ஐபேக் நிறுவனமும், பிரசாந்த் கிஷோர் வகுத்து கொடுத்த வியூகமும் தான்.

அதன்பிறகு பிரசாத் கிஷோரின் எனும் பி.கே.யின் புகழ் பரவியது. பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்கள் பகுதி பி.கே.வை அழைக்க தொடங்கினர். கர்நாடகாவில் தற்போது தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இங்கு ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க., எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய 3 கட்சிகளும் வெற்றிக்காக தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி எம்.எல்.ஏக்களும் தனியாக தேர்தல் வியூக நிபுணர்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். பி.கே. சீடர்கள் மூலம் தாங்கள் போட்டியிடும் தொகுதியின் கள நிலவரத்தை அறிந்து, பிரசாரத்தை முன்னெடுக்கின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் அரசியல் கட்சிகள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோருக்காக சுமார் 50 தேர்தல் வியூக நிறுவனங்கள் ஒப்பந்தம் போட்டு களப்பணியில் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களிடம் பணியாற்றும் நபர்கள், ‘நாங்கலாம் பி.கே பாய்ஸ்’ என்று பெருமையாக கூறி வருகிறார்களாம். அதுமட்டுமின்றி இந்த பெயரால் ஒரு நம்பகத்தன்மையும் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. பா.ஜ.க.வை பொறுத்த வரை ‘வராஹி’ என்ற பெயரில் தேர்தல் வியூக நிறுவனத்தை கட்டமைத்துள்ளது. இதன்மூலம் கர்நாடகாவில் தேர்தல் பணிகளை ஆற்ற முடிவு செய்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சியானது ‘மைண்ட் ஷேர்’ என்ற நிறுவனத்தை வேலையில் அமர்த்தியுள்ளது. இவை இரண்டில் பணியாற்றும் நபர்களும் பிரசாந்த் கிஷோரிடம் அரசியல் பாடம் கற்றவர்கள். இதேபோல் மதச்சார்பற்ற ஜனதா தளமும் பலரை தேர்தல் வியூகத்திற்காக நியமித்துள்ளது. இவர்களும் பி.கே மற்றும் ஐபேக் உடன் தொடர்புடையவர்கள். தேர்தல் அரசியலில் வியூக நிபுணர்களை பயன்படுத்துவதில் மூத்த அரசியல் கட்சிகளும் விதிவிலக்கல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.