;
Athirady Tamil News

மாவட்ட விவசாய குழுக் கூட்டத்தில் வெண் ஈ கட்டுப்படுத்துவது உள்ளிட்ட எடுக்கப்பட்ட ஏனைய தீர்மானங்கள்

0

யாழ்ப்பாண மாவட்ட விவசாய குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் (29.05.2025) யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர்,

மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இனங்காணல் மற்றும் அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இக் கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது எனவும், சென்ற கூட்டத்தில் இளம் விவசாயிகளை அடுத்து கூட்டத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும் என எமது வேண்டுகோளுக்கு அமைய, இன்றைய கூட்டத்தில் இளம் விவசாயிகள் வருகை தந்துள்ளமையானது வரவேற்க்கதக்கது விடயம் எனவும் தெரிவித்தார். மேலும், தற்போது அதிகரித்து வரும் தென்னை மரத்தை பாதிக்கும் வெண் ஈ தாக்கம் குறித்தும் அதனை கட்டுப்படுத்தும் செயற்றிட்டங்கள் குறித்தும் சிறந்த பொறிமுறைகளை கண்டறிய வேண்டும் எனவும், விவசாயத்துறையினை வளர்ப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்ததுடன், இன்றைய கூட்டத்தில் முதலில் விவசாயிகளின் கருத்துக்களை முன்வைக்குமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார். விவசாயிகளின் கருத்துக்கள் மற்றும் கோரிக்கைக்கு அமைய, அரசாங்க அதிபரால் பின்வரும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

1.வேலணயில் வீதி புனரமைப்பு செய்யப்பட்ட போது உரிய வடிகாலமைப்பு மேற்கொள்ளாத காரணத்தினால் வெள்ளத்தினால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய – வாய்க்கால்கள் அமைப்பது தொடர்பான பூர்வாங்க அறிக்கையினை பிரதேச செயலாளர் விரைவில் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் கலந்துரையாடி அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

2.தீவகப்பகுதிகளில் கட்டாக்காலி மாடுகள் தொடர்பாக பிரதேச சபையினரும், கமநல சேவைகள் திணைக்களமும் உரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

3.வேலணையில் மிளகாய் இலைகளின் மீதான நோய் தாக்கத்தினால் (பூச்சி மற்றும் வைரஸ் தாக்கம்) இலைகள் சுறுளடைவதாகவும், இதற்கான தீர்வு தேவை எனவும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, வெப்ப நிலை அதிகரிப்பும் திடீர் மழையும் காரணம் எனவும், Green colour lable கிருமிநாசினி களை பயன்படுத்தலாம் எனவும் எல்லைப் பயிர் மற்றும் பாதுகாப்பு வேலி அமைத்தும் மிளகாய் உற்பத்தியினை பாதுகாக்கலாம் எனவும் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட திணைக்களங்களால் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட உடுவில் பிரதேச விவசாயி ஒருவர் மிளகாய் உற்பத்தியில் வெற்றியடைந்துள்ளதால் அவரின் விவசாய இடத்தினை பிரதி விவசாயப் பணிப்பாளர் அவர்கள், வேலணை பிரதேச விவசாயிகளுடன் சென்று பார்வையிட்டு அனுபவப் பகிர்வை பகிர்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

4.உசன், கரம்பகம் எழுதுமட்டுவாழ் விவசாய நிலங்களில் ஏற்படும் வெள்ளத்தால் விவசாயம் பாதிக்கப்படுவதால் வாய்க்கால் அமைத்து நீரோட்டத்தினை பாய்ச்சுவதற்கான மதிப்பீட்டினை மாவட்டச் செயலாளர் அவர்களுக்கு அனுப்பி வைப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.

5.மேட்டுக் காணிப் பயிர்களுக்கான உர மானியம் வழங்குமாறு விவசாயிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய, அண்ணளவாக 2000 ஹெக்டேயர் மேட்டுக்காணிக்கு ஒரு ஹெக்டேயருக்கு 15000.00 வீதம் வழங்க வேண்டிய விவசாயிகள் கோரிக்கையினை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்வைப்பது எனத் தெரிவிக்கப்பட்டது.

6.குடத்தனை வலி கண்டியில் குப்பைகளை எதிர்காலத்தில் இடுவதனை நிறுத்துவது என தீர்மானிக்கப்பட்டதுடன், இதனை பருத்தித்துறை பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச, நகர சபை செயலாளர்கள் உறுதிப்படுத்துமாறும் தீர்மானிக்கப்பட்டது.

7.இந்திய அரசினால் வழங்கப்பட்ட உழவு இயந்திரங்களில் தற்போது பயன்பாட்டில் உள்ள உழவு இயந்திரங்கள் மற்றும் பழுதடைந்துள்ள உழவு இயந்திரங்களின் முழுமையான விவரங்களுடன் யூன் மாதம் 30 ஆம் திகதி கலந்துரையாடுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

8.விவசாய நவீன மயமாக்கல் செயற்றிட்டத்தில்உள்வாங்கப்பட்ட பயனாளிகளின் முழுமையான விவரங்களை பெற்று அதனை பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பிவைப்பது எனவும், இதன் மூலம் இத் திட்டத்தில் வெற்றியடைந்த மற்றும் தோல்வி அடைந்தவர்களை இனங்கான முடியும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

9.தென்னை மரங்களை பாதிப்புக்குள்ளாக்கும் வெண் ஈ தொடர்பாக, தென்னை மரங்களுக்கு தென்னை அபிவிருத்திச் சபையின் 15 தெளிகருவிகள் மூலம் வேப்பெண்ணெய் தெளித்து கட்டுப்படுத்த – முதற்கட்டமாக சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவுகளில் யூன் மாதம் 09 ஆம் திகதி யிலிருந்து 14 ஆம் திகதி வரையும், கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளில் 16 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையும், பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவுகளில் 23 ஆம் திகதியும் சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்கள் ஒருங்கினைப்பில் தென்னை அபிவிருத்திச் சபையின் மேற்பார்வையில் மேற்கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.

10.பாதீனித்தியத்தை கட்டுப்படுத்த பிரதேச செயலாளர்கள் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் ஒருங்கினைந்து செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டது.

11.அடுத்த கூட்டத்தினை யூலை மாதம் இறுதி வாரத்தில் நடாத்துவது எனவும், அக் கூட்டத்தில் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றங்களை ஆராய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இக் கலந்துரையாடலில் மாவட்ட விவசாய பணிப்பாளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாகாண விவசாயப்பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், நீர்ப்பாசன பொறியியலாளர், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், வங்கி மற்றும் காப்புறுதி சேவை பிரதிநிதிகள் உள்ளிட்ட துறைசாா் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.