;
Athirady Tamil News

அயோத்தி முதல் ராமேசுவரம் வரை 18 நாள் ராமாயண யாத்திரை ரெயில்: ஏப்ரல் 7-ந்தேதி புறப்படுகிறது!!

0

மத்திய ரெயில்வே துறை ஆன்மிக புனித யாத்திரையை பிரபலமாக்கும் வகையில் பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஸ்ரீ ராமாயண யாத்ரா என்ற பெயரில் 18 நாள் சுற்றுலா திட்டம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ‘பாரத் கவுரவ் டீலக்ஸ்’ என்ற சிறப்பு சுற்றுலா ரெயிலில் பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்ளலாம். நாடு முழுவதும் 26 பாரத் கவுரவ் சுற்றுலா ரெயில்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த வகை ரெயில்கள் நவீன வசதிகள் கொண்டது. 2 உணவு விடுதிகளும் இதனுடன் இணைக்கப்பட்டிருக்கும். ஷவர் வசதி கொண்ட குளியல் அறைகள், தானியங்கி கழிவறைகள், கால்களை மசாஜ் செய்யும் கருவிகள் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. முழுவதும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளைக் கொண்ட இந்த ரெயிலில் அனைத்து பெட்டிகளிலும் கேமரா கண்காணிப்பும், போலீஸ் பாதுகாப்பும் உண்டு. இந்த ஆண்டுக்கான புனித யாத்திரை வருகிற ஏப்ரல் 7-ந்தேதி தொடங்குகிறது.

டெல்லி சப்தர்ஜங் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த ரெயில் ராமர் வரலாற்றுடன் தொடர்புடைய பல்வேறு இடங்களுக்கு பயணமாகிறது. இந்த ரெயில் முதல் நிறுத்தமாக அயோத்தியில் நிறுத்தம் செய்யப்படும். அங்கு ராமஜென்மபூமி கோவில், அனுமான் கோவில் மற்றும் சரயுயார்தி ஆகிய இடங்களை பார்க்கலாம். பின்னர் பீகாரின் சீதாமார்கி சென்று சீதை பிறந்த இடத்தையும், நேபாளத்தின் ஜனக்பூரில் உள்ள ராம ஜானகி கோவிலையும் பார்க்கலாம். ஜனக்பூருக்கு பஸ்சில் அழைத்து செல்லப்படுவார்கள். பின்னர் ரெயில் பக்ஸர் செல்லும். அங்கு ராம்ரேகாகாட், ராமேஸ்வர்நாத் கோவில்களை பார்வையிடலாம். கங்கை குளியல் செய்யலாம். அங்கிருந்து ரெயில் வாரணாசி செல்லும். அங்கு காசி விஸ்வநாதர் கோவிலை பார்க்கலாம். அப்படியே பிரயாக்ராஜ், ஸ்ரீரிங்வர்பூர், சித்ரகூட் ஆகிய இடங்களுக்கு சாலை மார்க்கமாக அழைத்து செல்லப்படுவார்கள். இரவு நேரத்தில் அந்தந்த நகரங்களில் தங்க அனுமதிக்கப்படுவார்கள்.

அங்கிருந்து பயணிகள் நாசிக் அழைத்து செல்லப்பட்டு ரிம்பகேஸ்வரர் ஆலயத்தையும், பஞ்சவதியையும் பார்வையிடலாம். பின்னர் ஹம்பி சென்று பழம்பெருமைமிக்க கிருஷ்கிந்தா நகரை பார்க்கலாம். அங்கிருந்து ரெயில் தமிழகத்தின் ராமேசுவரம் புறப்படுகிறது. அங்கு ராமநாதசாமி கோவில் மற்றும் தனுஷ்கோடியை பார்வையிடலாம். அடுத்தநிறுத்தமாக சீதா ராமர் கோவில் உள்ள பத்ராச்சலம் நகரில் நிறுத்தப்படுகிறது. இறுதியாக நாக்பூர் கிளம்பி சென்று ராம்தேக் கோட்டை மற்றும் கோவிலை பார்க்கலாம். இங்கு ராமர் ஓய்வு எடுத்ததாக நம்பிக்கை.

அத்துடன் பயணத்தை நிறைவு செய்து கொண்டு ரெயில் டெல்லி சென்றடைகிறது. இந்த பயணத்திற்கு ஒரு நபருக்கு ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 65 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. முதல் வகுப்பு ஏசி. பெட்டிக்கு ரூ.1 லட்சத்து 46 ஆயிரம் கட்டணமாகும். ஜோடிக்கான கட்டணமாக ரூ.1 லட்சத்து 69 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. ரெயில் பயணம், தங்குமிடம், உணவு, கோவில்களுக்கு செல்லுதல், அதற்கான வாகனம் அனைத்துக்கும் சேர்த்ததுதான் இந்த கட்டணம். காப்பீடும் இதில் அடங்கும். இந்த தகவல்கள் மத்திய ரெயில்வே துறை வெளியிட்டு உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.