;
Athirady Tamil News

பணவீக்கத்தை ஒற்றை இலக்கத்திற்கு கொண்டு வருவதே அரசின் நோக்கம்!!

0

2025 ஆம் ஆண்டளவில் முதன்மை பற்றாக்குறையை மொத்த தேசிய உற்பத்தியில் 2.3% ஆக குறைத்து, 2026 ஆம் ஆண்டளவில் அரசாங்க வருமானம் மொத்த தேசிய உற்பத்தியில் 15% ஆக உயர்த்த அரச இலக்கு வைத்துள்ளது. துறைசார் வரிச் சலுகை அரச நிறுவன வரி விகிதம் 30% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. VAT 8% இலிருந்து 15% ஆக அதிகரித்துள்ளது.

VAT வரிக்கு வழங்கப்பட்ட விலக்குகளை படிப்படியாக குறைப்பதற்கும் VAT வரி மீளளிப்புகளை துரிதப்படுத்துவதற்கும் எஸ் VAT முறையை நீக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

2025 இல் குறைந்தபட்ச வரி விலக்குடன் சொத்து வரி முறைக்குப் பதிலாக செல்வ வரியை அறிமுகப்படுத்துவதற்கும், பரிசு மற்றும் பரம்பரை வரியை அறிமுகப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குள் பணவீக்க வீதத்தை ஒற்றை இலக்கத்திற்கு கொண்டு வருவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என ஜனாதிபதி தெரிவித்தார். வரவு செலவுத்திட்ட பற்றாக்குறையை குறைக்கவும், பணம் அச்சிடுவதை தவிர்க்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

அந்நியச் செலாவணி சந்தையின் செயல்பாடுகள் சந்தை அளவுகோல்களின் அடிப்படையில் தீர்மானிக்க வழியேற்படுத்தப்படுவதோடு, நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளின்படி வெளிநாட்டு கையிருப்புக்களை அதிகரித்துக் கொள்ள மத்திய வங்கி வெளிநாட்டு நாணயங்களை கொள்வனவு செய்யவும் திட்டமிட்டுள்ளது.

நல்லாட்சியைப் பொறுத்தமட்டில், சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் ஊழல்களை மதிப்பிடுவதற்கான அறிக்கையை தயாரித்து வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் சாசனங்களுக்கு ஏற்ப ஊழலுக்கு எதிரான சட்டம் உருவாக்கப்படுவதோடு, புதிய அரச நிதி முகாமை சட்டம் வரைவு செய்யப்படும்.

வரிச்சலுகைகள், வரி இடைவெளி மற்றும் பெரிய அளவிலான அரச கொள்முதல் ஒப்பந்தங்களைக் கொண்டிருக்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலை பகிரங்கப்படுத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், நாட்டில் வெளிப்படைத் தன்மையை அதிகரிப்பது மற்றும் ஊழலைத் தடுப்பதே நோக்கமாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.