;
Athirady Tamil News

வீடுபுகுந்து நகை திருடிய சமூக வலைதள ‘ரீல்ஸ்’ இளம் பெண் கைது!!

0

தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர் புத்தர் நகரைச் சேர்ந்தவர் சபாபதி. இவரது மனைவி மாலதி. இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த வாரம் தம்பதி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று இருந்தனர். மாலதி திரும்பி வந்தபோது வீட்டில் இருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் மாயமாகி இருந்தது. ஆனால் வீட்டின் பூட்டு உடைக்கப்படவில்லை. வீட்டின் அருகே மறைத்து வைத்திருந்த சாவியை நோட்டமிட்டு கைவரிசை காட்டி இருப்பது தெரிந்தது. இதுகுறித்து பீர்க்கன்காரணை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கொள்ளை நடந்த வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில் ஜீன்ஸ் பேண்ட், டி-சர்ட் அணிந்த இளம்பெண் பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளில் செல்வது பதிவாகி இருந்தது.

இதைத்தொடர்ந்து அந்த இளம்பெண் குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள மொத்தம் 47 கண்காணிப்பு கேமிராக்களின் பதிவுகளை வைத்து விசாரித்தனர். இதில் அவர், மண்ணிவாக்கம் பகுதியில் வசித்து வரும் சமூகவலைதளத்தில் ரீல்ஸ் செய்து பிரபலமாக உள்ள அமீஷாகுமாரி (33) என்பது தெரிந்தது. இதைதொடர்ந்து அமீஷா குமாரியின் வீட்டுக்கு போலீசார் சென்றனர். அப்போது அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதற்காக ரீல்ஸ் செய்து கொண்டிருந்தார். நகை திருட்டு சம்பந்தமாக விசாரிக்க வேண்டும் என்று போலீசார் கூறியதும் அமீஷாகுமாரி ஆவேசம் அடைந்தார். நான் திருடவில்லை என்றும், சமூகவலைதளத்தில் ரீல்ஸ் செய்து மாதம் ரூ.15 ஆயிரத்துக்கும் மேலாக சம்பாதிக்கிறேன்.எனக்கு திருட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.

இதனால் விசாரணைக்கு சென்ற போலீசார் ஒரு நிமிடம் திகைத்தனர். தவறாக சந்தேகப்பட்டு விட்டோமோ என்று நினைத்தனர். எனினும் கண்காணிப்பு கேமிரா காட்சியை காட்டி அமீஷாகுமாரியிடம் போலீசார் கிடுக்கிப்பிடியாக விசாரித்தபோது அவர் வீடு புகுந்து நகை திருடியதை கொண்டார். இதையடுத்து அமீஷாகுமாரியை போலீசார் கைது செய்தனர். திருடிய நகையை அவரது வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைத்து இருந்தார். அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். பணம் குறித்து கேட்ட போது அனைத்தையும் செலவு செய்து விட்டதாக தெரிவித்தார். போலீசாரிடம் அமீஷாகுமாரி கூறும்போது, ரீல்ஸ் மூலமாக கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லை.

எனவே ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு திருடினேன். திருடிய பணம் முழுவதையும் செலவு செய்துவிட்டேன் என்று கூறி உள்ளார். வீடுகளை பூட்டி செல்லும் போது சாவியை வீட்டின் அருகே மறைத்து வைத்து செல்லும் இடங்களை நோட்டமிட்டு அமீஷாகுமாரி கைவரிசை காட்டி உள்ளார். போலீசில் சிக்காமல் இருப்பதற்காக கொள்ளையடிக்க சென்ற போது தனது மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை கழற்றி வைத்து உள்ளார். எனினும் போலீசார் அப்பகுதியில் உள்ள 47 கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து அமீஷாகுமாரிவை கைது செய்தனர். அமீஷாகுமாரி ரீல்ஸ் செய்து பிரபலமாக உள்ளார். அவரது வீடியோவை பார்க்க தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

அவரது சமூக வலைதள பக்கத்தை ஏராளமானோர் பின் தொடர்கிறார்கள். வித விதமாக ரீல்ஸ் செய்தும் எதிர்பார்த்த பணம் கிடைக்காததால் அவர் தடம் மாறி கொள்ளையில் ஈடுபட்டு உள்ளார். அமீஷாகுமாரி ஏற்கனவே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக சாலையில் நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி ஆன்லைனில் விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப் பட்டவர் என்று போலீசார் தெரிவித்தனர். அவர் இது போல் வேறு எந்தெந்த இடங்களில் கைவரிசை காட்டி உள்ளார் என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.