அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு: இன்று தண்டனை விபரம் அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு இன்று (ஜூன் 2) தண்டனை விபரம் அறிவிக்கப்பட உள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என மகளிா் நீதிமன்றம் கடந்த புதன்கிழமை தீா்ப்பளித்தது.
அவருக்கான தண்டனை விவரம் ஜூன் 2-ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தது. அதன்படி தண்டனை விபரத்தை இன்று காலை 10.30 மணிக்கு அறிவிக்கிறது சென்னை மகளிர் சிறப்பு நிதிமன்றம்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிச. 23-ஆம் தேதி 19 வயதான இரண்டாமாண்டு பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாா்.
இதுதொடா்பான புகாரின்பேரில் கோட்டூா்புரம் அனைத்து மகளிா் போலீஸாா் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்து, அதே பகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்த கோட்டூரைச் சோ்ந்த ஞானசேகரன் என்பவரை டிச. 24-ஆம் தேதி கைது செய்தனா்.
பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவி, தனக்கு எதிராக பாலியல் வன்கொடுமை நடந்ததாகப் புகாா் அளித்து 5 மாதங்களில் இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீா்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.