;
Athirady Tamil News

ரஷியாவில் உளவு பார்த்த விவகாரம்- பிரபல வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை நிருபர் கைது!!

0

உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போரானது இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்து தொடர்ந்து வருகிறது. ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் எடுத்து வருகின்றன. போரை நிறுத்த கோரும் அந்நாடுகள், மறுபுறம் உக்ரைனுக்கு ஆயுதம், நிதி உள்ளிட்ட உதவிகளை வழங்கி போரை ஊக்கப்படுத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டையும் அதிபர் புதின் முன்வைத்து உள்ளார். இந்நிலையில், போர் சூழலை பற்றி செய்தி சேகரிக்க சென்ற பிரபல அமெரிக்க பத்திரிகை நிருபர் ஒருவர், உளவு பார்த்த குற்றச்சாட்டில் ரஷியாவில் வைத்து கைது செய்யப்பட்டு உள்ளார். அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையை சேர்ந்த ஈவான் கெர்ஷ்கோவிச் என்ற நிருபரை ரஷியா கைது செய்து உள்ளது. இதுபற்றி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து உள்ளது. நிருபரின் உயிர்பாதுகாப்பு பற்றி கவலை தெரிவித்து உள்ளது.

ரஷியாவின் மத்திய பாதுகாப்பு துறை எனப்படும் எப்.எஸ்.பி. என்ற உளவு அமைப்பு வெளியிட்ட செய்தியில், யெகாடரீன்பர்க் மாகாணத்தில், உரால் மலைப்பிரதேச பகுதியில் வைத்து வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை நிருபர் கைது செய்யப்பட்டார். அமெரிக்க தரப்பு உத்தரவின்படி ஈவான் செயல்பட்டு, ரஷிய ராணுவத்தின் தொழில் வளாகத்தில் உள்ள நிறுவனங்களில் ஒன்றின் செயல்பாடுகள் பற்றி ரகசிய தகவல்களை சேகரித்து உள்ளார் என தெரிவித்து உள்ளது. இந்த தகவலை வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை வெளியிட்டு உள்ளது. இதனை அல்-ஜசீரா செய்தி நிறுவனமும் உறுதி செய்து உள்ளது. எனினும், உக்ரைன் போர் மற்றும் ரஷியாவின் வாக்னர் என்ற கூலிப்படை குழு ஆகியவற்றை பற்றி அவர் செய்தி சேகரித்து வந்துள்ளார் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.

இந்த உளவு குற்றச்சாட்டில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டால், ஈவானுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க கூடும். உக்ரைனுக்கு எதிராக போர் தொடங்கியதில் இருந்து, முதன்முறையாக அமெரிக்க செய்தி நிறுவன பத்திரிகையாளர் ஒருவர் ரஷியாவில் வைத்து உளவு குற்றச்சாட்டுக்கான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு உள்ளார் என்றும் அல்-ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.