;
Athirady Tamil News

மனித மூளையை மிஞ்சி அதிசக்தியுடன் உருவாகும் ஏஐ தொழில்நுட்பம் எமனாகும்: உருவாக்கிய விஞ்ஞானி கதறல்!!

0

‘செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை உருவாக்கியதற்காக வருந்துகிறேன். இது எதிர்காலத்தில் மனித மூளையை மிஞ்சி அதிசக்தியுடன் மிகுந்த ஆபத்துகளை ஏற்படுத்தும்’ என ஏஐ தொழில்நுட்பத்தின் ‘காட்பாதர்’ என போற்றப்படும் ஜெப்ரி ஹின்டன் எச்சரித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவுடன் செயல்படும் சாட்பாட்டுகளை மேம்படுத்துவதில் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் போட்டி போட்டு செயல்படுகின்றன. மைக்ரோசாப்ட் உருவாக்கிய சாட்ஜிபிடி, பிங்க் போன்ற சாட்பாட்களை மிஞ்சும் அளவுக்கு கூகுளும் சாட்பாட்டை உருவாக்கி வருகிறது. இந்த சாட்பாட்கள் மனிதனை போலவே சிந்தித்து பதில் தரக்கூடியவை. எந்த கட்டுரையையும் நிமிடத்தில் எழுதி தரும், கம்ப்யூட்டர் கோடிங்கை எழுதும், தொழில் நிறுவனங்களின் அறிக்கைகளை நிமிடத்தில் தயார் செய்து தந்திடும்.

இந்த தொழில்நுட்பம் வளர வளர பலரது வேலைவாய்ப்புகள் காலியாகி விடும் என ஏற்கனவே பலர் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பிதாமகனாக கருதப்படும் ஜெப்ரி ஹின்டன் (வயது 75) அளித்த பேட்டி உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கூகுள் நிறுவனத்தில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஹின்டன் சமீபத்தில் தனது பணியிலிருந்து விலகி பிறகு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அபாயத்தை பற்றி பேசியிருக்கிறார். இவர் கடந்த 2012ம் ஆண்டு உருவாக்கிய தொழில்நுட்பமே பின்னாளில் செயற்கை நுண்ணறிவுக்கு வழிவகுத்தது. ஹிண்டன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: செயற்கை நுண்ணறிவு தொடர்பான எனது ஆய்வுகளுக்காக நான் வருந்துகிறேன். ஆனால் இதை நான் செய்யாமல் இருந்திருந்தாலும் கூட வேறு யாராவது ஒருவர் செய்திருப்பார்.

தற்போதைய செயற்கை நுண்ணறிவுடன் கூடிய சாட்பாட்களின் வளர்ச்சி மிகவும் அச்சமூட்டும் வகையில் உள்ளன. இத்துறையில் ஏற்படும் முன்னேற்றங்கள் பின்னாளில் மிகுந்த ஆபத்துகளை உருவாக்கக் கூடும்.
தற்போதைய ஜிபிடிகள் மனித மூளையை மிஞ்சும் அளவுக்கு வளர்ச்சி அடைந்து விட்டன. ஆனாலும் மனிதனைப் போல் அவை பகுத்தறிந்து செயல்படும் அளவுக்கு இல்லை. எதிர்காலத்தில் அந்த வளர்ச்சியையும் செயற்கை நுண்ணறிவு சாட்பாட்கள் எட்டும். அப்போது அதுவே மனித குலத்திற்கு எமனாகவும் வாய்ப்புகள் உள்ளன.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

ஹின்டனின் இந்த பேட்டி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உலகில் பெரும் பேசுபொருளாகி உள்ளது. அதே சமயம் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவதில் மிகுந்த பொறுப்புடன் செயல்படுவதாக கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் கூறி உள்ளன.

புடினிடம் கிடைத்தால் உக்ரைனை அழிப்பார்: ஹின்டன் மேலும் கூறுகையில், ‘‘மனிதனை மிஞ்சி அதிசக்தியுடன் செயல்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ரஷ்ய அதிபர் புடின் போன்ற அதிகாரமிக்க நபர்களிடம் கிடைத்தால் என்னவாகும்? அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிபுத்திசாலியான ரோபோக்களை புடின் உருவாக்கி, உக்ரைனையே அழித்து விடுவார்’’ என்றார்.

அனுபவத்தில் பாடம் கற்கும் செயற்கை நுண்ணறிவில் உள்ள நரம்பியல் நெட்வொர்க்குகள் என்பது மனித மூளையைப் போலவே தகவல்களை கற்றுக் கொள்வது, அதை செயலாக்குவது போன்ற அமைப்பாகும். இயற்கையான மனிதனைப் போலவே, ஒவ்வொரு அனுபவத்திலும் இருந்து பாடங்களை கற்றுக் கொள்ள அவை செயற்கை நுண்ணறிவை செயல்படுத்துகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.