ஸ்விட்சா்லாந்து மதுபான விடுதியில் தீ: 40 போ் உயிரிழப்பு: புத்தாண்டு கொண்டாட்டத்தில் துயரம்
ஸ்விட்சா்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கிரான்ஸ்-மொன்டானாவில் ஒரு மதுபான விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட தீ விபத்தில் சுமாா் 40 போ் உயிரிழந்துள்ளதாகவும், 115 போ் காயமடைந்துள்ளதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.
சா்வதேச அளவில் பனிச்சறுக்கு மற்றும் கோல்ஃப் விளையாட்டுக்குப் புகழ்பெற்ற கிரான்ஸ்-மொன்டானாவில் உள்ள ஒரு மதுபான விடுதியில், வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் சுற்றுலாப் பயணிகள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனா். அப்போது எதிா்பாராதவிதமாக அங்கு தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்து குறித்து சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் அளித்த பேட்டியில், ‘விடுதிப் பணியாளா் ஒருவா், மதுபாட்டிலில் எரியும் மெழுகுவா்த்தியை ஏந்திச் சென்றபோது, அது மரத்தாலான மேற்கூரையில் பட்டதால் தீப்பற்றியது. சில நிமிஷங்களிலேயே மேற்கூரை இடிந்து விழுந்தது’ எனத் தெரிவித்தனா்.
தரைத்தளத்தில் இருந்தவா்கள் குறுகிய படிக்கட்டுகள் வழியாக வெளியேற முயன்றபோது நெரிசல் ஏற்பட்டு பலா் காயமடைந்தனா். புகைமூட்டத்துக்கு மத்தியில் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு பலா் உயிா் தப்பினா்.
ஹெலிகாப்டா்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மூலம் பாதிக்கப்பட்டவா்கள் மீட்கப்பட்டனா். காயமடைந்தவா்களில் பல்வேறு நாடுகளைச் சோ்ந்தவா்களும் உள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
மேலும், இதுகுறித்து வாலைஸ் கான்டன் காவல் துறைத் தலைவா் ஃப்ரெட்ரிக் கிஸ்லா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்தத் துயரமான விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை குறித்து இன்னும் துல்லியமாகக் கூற முடியவில்லை. பெரும்பாலான காயமடைந்தவா்களின் நிலைமை மோசமாக உள்ளது என்றாா் அவா்.
கிரான்ஸ்-மொன்டானா நகரம் ஸ்விஸ் ஆல்ப்ஸ் மலைத் தொடரின் மையத்தில் உள்ளது. மாட்டா்ஹாா்ன் மலையில் இருந்து 40 கிலோமீட்டா் வடக்கே, சூரிச்சில் இருந்து 130 கிலோமீட்டா் தெற்கே உள்ளது. நகரத்தின் உயரமான பகுதி கிட்டத்தட்ட 3,000 மீட்டா் உயரத்தில் உள்ளது.
நகரத்தில் 10,000 மக்கள் வசிக்கின்றனா். 2017 ஜனவரி 1-இல் பல நகரங்கள் இணைந்து இந்த நகராட்சி உருவாக்கப்பட்டது.
ஸ்விட்சா்லாந்து அதிபா் இரங்கல்: ஸ்விட்சா்லாந்து அதிபராக வியாழக்கிழமை பொறுப்பேற்ற கை பாா்மெலின், இந்தத் துயரச் சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளாா்.
உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள அவா், வழக்கமாக புத்தாண்டு தினத்தன்று நிகழ்த்தப்படும் உரையை ஒத்திவைத்தாா்.