;
Athirady Tamil News

“தலிபான்கள் உடனான சந்திப்பை தவிர்க்க மாட்டேன். ஆனால்…” – ஐ.நா. பொதுச் செயலாளர்!!

0

“தலிபான்களைச் சந்திப்பதை நான் தவிர்க்க போவதில்லை. ஆனால், அதற்கு சரியான நேரம் தற்போது இல்லை” என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியா குத்தரெஸ் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள், குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள் பற்றிய முக்கிய பிரச்சினைகளை விவாதிப்பதற்காக தோகாவில் ஆப்கானிஸ்தான் தூதர்கள் நடத்திய கூட்டத்தில் ஐ.நா.பொதுச்செயலாளர் அண்டோனியா குத்தரெஸ் கலந்து கொண்டார். தலிபான்களுடன் எவ்வாறு பணியாற்றுவது என சர்வதேச சமூகத்திற்கு ஒரு பொதுவான புரிதலை ஏற்படுத்துவதற்காக இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் அண்டோனியாவிடம் பத்திரிகையாளர்கள், “நீங்கள் தலிபான்களை சந்திப்பீர்களா?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அண்டோனியா குத்தரெஸ், “தலிபான்களுடன் நேரடையாக பேசுவதற்கும், சந்திப்பதற்கும் சரியான தருணமாக இருக்கும்போது, ​​நான் வெளிப்படையாக அந்த வாய்ப்பை மறுக்க மாட்டேன். ஆனால், அவ்வாறு செய்ய இன்று சரியான தருணம் இல்லை” என்றார்.

முன்னதாக, கடந்த மாதம் ஐ.நா. அமைப்பில் ஆப்கன் பெண்கள் பணிபுரிய தலிபான்கள் அரசு தடை விதித்தது. “தலிபான்களின் இந்த முடிவை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது. பெண் ஊழியர்கள் இல்லாமல் மருத்துவத் துறை சார்ந்த இங்குள்ள உயிர் காக்கும் கருவிகளை இயக்க முடியாது” என்று ஐ.நா தெரிவித்தது. எனினும் தலிபான்கள் தங்கள் முடிவை கைவிடவில்லை.

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஆப்கானிஸ்தானுக்கு ஐ.நா. குழு, மனிதாபிமான உதவிகளை செய்து வருகிறது. இதில் ஆப்கன் பெண்களே முக்கிய அங்கம் வகித்தனர்.

தலிபான்கள் ஆட்சியும் சர்ச்சையும்.. – ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி என்று அவர்கள் அறிவித்தனர். எனினும், கடந்த முறையைப் போல் ஆட்சி இருக்காது என்றும், பெண் கல்வி; பெண் சுதந்திரம் பேணப்படும் என்றும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர்.

ஆனால், அவர்களின் அறிவிப்புக்கு மாறாக தலிபான் நிர்வாகம், ஆப்கானிஸ்தானில் பெண்கள் பணிக்கு செல்ல அனுமதி மறுத்தனர். சிறுமிகள் உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்குச் செல்வது தடை விதித்தது. பல்கலைக்கழகங்களிலும் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.