;
Athirady Tamil News

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் அழகுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்

0
video link-

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியை அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் இரண்டாம் வருட பயிலுனர் மாணவர்களினால் அழகு படுத்தும் புதிய வேலை திட்டம் செவ்வாய்க்கிழமை (03) பாடசாலையின் அதிபர் எம்.எம்.ஹிர்பகான் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாடசாலை சூழலை கற்றல் கற்பித்தல் செயற்பாட்டிற்கு ஏற்ப அழகு படுத்தி சமூக ஒருமைப்பாட்டை உருவாக்கும் செயற்திட்டத்தின் கீழ் இந்த பாரிய வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலைக்கு வருகை தந்த அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி எம்.சி. ஜூனைட், உப பீடாதிபதி எம்.ஐ.ஜஃபர் (நிதி – நிர்வாகம்), உப பீடாதிபதி ஏ.எஸ்.எம்.சதாத் (தொடருறு ஆசிரியர் பயிற்சி), விரிவுரையாளர் இணைப்பாளர் ஏ.எம்.நியாஸ், மற்றும் கல்வி சாரா ஊழியர்கள், ஆசிரிய பயிலுனர் மாணவர்கள் அடங்கிய குழுவினரை பாடசாலையின் அதிபர் எம். எம். ஹிர்பகான் தலைமையிலான பிரதி அதிபர்களான எம்.பி.அஹமட் ராஜி ,ஏ. ஆர். என். மன்பூஸா, உதவி அதிபர்களான , எம். ஐ.சர்மலா,எம். எஸ்.எம்.சர்மூன், எம். ஏ.எஸ். நஹீதா, எம்.சி. எம். றக்ஸான் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட நிர்வாகத்தினர் இன்முகத்தோடு மாலை அணிவித்து வரவேற்றனர்.

இதனை அடுத்து பாடசாலையில் முறையாக மேற்கொள்ளப்பட வேண்டிய சுமார் 15 க்கும் மேற்பட்ட வேலை திட்டங்கள் தொடர்பாக குழுக்கள் அமைக்கப்பட்டு பகுதி பகுதியாக பிரிக்கப்பட்டு பல்வேறு வேலை திட்டங்களும் முறையாக முன்னெடுக்கப்பட்டன. இதன் அடிப்படையில் பாடசாலை சுற்றுப்புற சூழல் மற்றும் வகுப்பறைகள் அடங்கிய பாடசாலை வளாகத்தை துப்புரவு செய்தல், அவற்றை அழகுபடுத்துதல், வகுப்பறைகளை அழகுபடுத்துதல் மற்றும் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு பொருத்தமான சூழல்களை உருவாக்குவது போன்ற பல்வேறு வேலை திட்டங்களையும் ஆசிரிய மாணவர்கள் குழுக்களாக இணைந்து செயல்படுத்தினர்.

தொடர்ந்து மூன்று தினங்களுக்கு பாடசாலையில் தங்கியிருந்து இந்த பாரிய வேலை திட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். இதன் போது, வீதி நாடகம், விளையாட்டு நிகழ்ச்சிகள், கலை கலாசார நிகழ்வுகள் மற்றும் கல்வியற் கல்லூரியின் பயிலுனர் மாணவர்களின் செயற்திட்டங்கள் பற்றிய பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலையை அழகுபடுத்தும் இந்த பாரிய வேலை திட்டத்திற்கு ஒத்துழைப்பு களையும் பங்களிப்புகளையும் முன்வந்து வழங்கிய நலன்விரும்பிகள் மற்றும் அனுசரணையாளர் களுக்கு பாடசாலையின் அதிபர் மற்றும் பாடசாலை நிருவாகத்தினர் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.இதேவேளை இந்த வேலைத்திட்டம் மருதமுனை அல்-மதீனா வித்தியாலயத்திலும் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.