;
Athirady Tamil News

கர்நாடக இறையாண்மை என்று பேசுவதா? சோனியா மீது நடவடிக்கை எடுங்கள்: தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார்!!

0

கர்நாடக மாநிலத்தில் நாளை மறுநாள் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கர்நாடகா மாநிலத்தின் ஹுப்ளியில் சனிக்கிழமை நடந்த காங்கிரஸ் பிரச்சார கூட்டத்தில், அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார். சோனியா காந்தி பேசியதை குறித்து காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், “சோனியா காந்தி, 6.5 கோடி கன்னடர்களுக்கும் உறுதியான செய்தியை தெரிவித்திருக்கிறார்.

கர்நாடகாவின் நற்பெயர், இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு களங்கம் ஏற்படுத்த ஒருவரையும் காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. சோனியா காந்தியின் இந்த கருத்து தேர்தல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காங்கிரசுக்கு பிரதமர் மோடி மற்றும் பாஜகவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கர்நாடகாவின் இறையாண்மை என்று பேசியதன்மூலம் கர்நாடகாவை இந்தியாவிடம் இருந்து பிரிக்கவேண்டும் என்று காங்கிரஸ் விரும்புவதாக பிரதமர் குற்றம்சாட்டினார். இந்நிலையில், காங்கிரஸ் மீதும் அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் பாஜக மனு அளித்துள்ளது.

‘இந்திய யூனியனில் கர்நாடகா ஒரு முக்கியமான உறுப்பு மாநிலமாகும். இந்திய யூனியனின் எந்த ஓர் உறுப்பு மாநிலத்தின் இறையாண்மையை பாதுகாப்பதற்கான எந்த ஒரு அழைப்பும் பிரிவினைவாத அழைப்புக்கு சமம். அத்துடன், இது மோசமான பின்விளைவுகளுக்கும் வழிவகுக்கும்’ என பாஜக தனது கடிதத்தில் கூறி உள்ளது. மேலும் இத்தகைய ட்வீட், தேசியவாதிகள், அமைதியை விரும்புபவர்கள், முற்போக்கான மற்றும் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட கர்நாடக மக்களைத் தூண்டிவிடும் செயல் என்றும் பாஜக தெரிவித்துள்ளது. மேலும், சோனியா காந்தி பேச்சு தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் பதிவினையும் பாஜக தனது புகாருடன் இணைத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.