;
Athirady Tamil News

கர்நாடக தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு- 1.5 லட்சம் போலீஸ் பாதுகாப்பு!!

0

கர்நாடக மாநிலத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதைத்தொடர்ந்து புதிய ஆட்சி பதவி ஏற்கும் வகையில் 224 தொகுதிகளை உள்ளடக்கிய கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந்தேதி (அதாவது இன்று) ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் மாதம் 29-ந்தேதி அறிவித்தது. அதைத்தொடர்ந்து வேட்புமனு தாக்கல் கடந்த ஏப்ரல் 13-ந்தேதி தொடங்கி 20-ந்தேதியுடன் நிறைவடைந்தது. 21-ந்தேதி மனுக்கள் பரிசீலனையும், 24-ந்தேதி மனுக்கள் வாபஸ் பெறுதலும் நடந்தது. தொடர்ந்து 24-ந்தேதி மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி 224 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். இதில் பா.ஜனதா சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 223 வேட்பாளர்களும் ஜனதாதளம் (எஸ்) கட்சி 209 வேட்பாளர்களும், ஆம் ஆத்மி கட்சி சார்பில் 209 வேட்பாளர்களும், 918 சுயேட்சைகளும் களத்தில் உள்ளனர்.

ஒரே ஒரு திருநங்கை போட்டியிடுகிறார். தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மாநிலத்தில் மொத்தம் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 2 கோடியே 67 லட்சத்து 28 ஆயிரத்து 53, பெண்கள் 2 கோடியே 64 லட்சத்து 74, மூன்றாம் பாலினத்தவர் 4 ஆயிரத்து 927, மாற்றுத்திறனாளிகள் 5 லட்சத்து 71 ஆயிரத்து 281 அடங்குவர். 11 லட்சத்து 71 ஆயிரத்து 558 புதிய வாக்காளர்கள் முதல்முறையாக வாக்களிக்கின்றனர். தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 58 ஆயிரத்து 545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 11 ஆயிரத்து 617 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ஆகும். மேலும் தேர்தலையொட்டி 1 லட்சத்து 65 ஆயிரத்து 389 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

3.5 லட்சம் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ளார்கள். வாக்குப்பதிவிற்கு 76 ஆயிரத்து 603 மின்னணு வாக்கு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இவை நேற்று முன்தினமே அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. விவிபேட் எனப்படும் வாக்காளர்கள் அளித்த வாக்கை சரிபார்த்துக்கொள்ளும் 76,202 கருவிகள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன் பொருத்தப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டன. மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக சாய்வு தளங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

பெண்களுக்கான வாக்குச்சாவடிகள், மாற்றுத்திறனாளிகள், இளம் வாக்காளர்கள், மலைவாழ் மக்களுக்கான வாக்குச்சாவடிகள் பல்வேறு வகையான வாக்குச்சாவடிகள் வாக்காளர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த வாக்குச்சாவடிகளில் கலாசாரத்தை பிரதிபலிக்கும் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அங்கு நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அத்துடன் அந்த வாக்குச்சாவடிகள் இணைய (வெப்) கேமரா மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டது. அதிகாலை முதலே வாக்களிக்க ஓட்டுச்சாவடிகள் முன்பு ஏராளமானோர் திரண்டனர். வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

காலையில் இருந்தே விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தார்கள். காலை 11 மணி நிலவரப்படி 21 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. வாக்குப்பதிவை எந்தவித அசம்பாவித சம்பவங்கள் இன்றி அமைதியாக நடத்த பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. 5 பேருக்கு மேல் ஒன்றாக செல்ல கூடாது, போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலம் நடத்த தடை என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பெங்களூரு விஜய் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். முன்னாள் முதலமைச்சரான எடியூரப்பா 7 முறை வெற்றிபெற்ற தொகுதி, ஷிகாரிபுரா. இத்தொகுதியை அவரது மகன் பி.ஒய். விஜயேந்திராவுக்கு பா.ஜ.க. தற்போது ஒதுக்கியுள்ளது. இந்நிலையில், ஷிகாரிபுரா பகுதியில் உள்ள ராகேவந்திர சுவாமி கோவிலில் எடியூரப்பா, விஜயேந்திரா மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று காலை சாமி தரிசனம் செய்தனர். இதன்பிறகு எடியூரப்பா அங்குள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தார்.

பின்பு அவர் கூறும்போது, அருதிப் பெரும்பான்மை பெற்று கர்நாடகாவில் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார். பெங்களூரு ஆர்.ஆர். நகரில் உள்ள வாக்குச் சாவடியில் கன்னட நடிகை அமுல்யாவும் அவரது கணவரும் வாக்களித்தனர். கர்நாடக மந்திரி சி.என். அஸ்வத் நாராயண் பெங்களூரு வாக்குச்சாவடியில் வாக்களித்தார். நடிகர் பிரகாஷ் ராஜ் பெங்களூரு சாந்தி நகரில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். வகுப்புவாத அரசியலுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று அவர் கூறினார். கர்நாடக அமைச்சரும் பா.ஜ.க. தலைவருமான கே.சுதாகர் சிக்கபள்ளாப்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.