;
Athirady Tamil News

இலங்கைக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்திய மத்தள விமான நிலையம்

0

மத்தள சர்வதேச விமான நிலையம் கடந்த ஆறு ஆண்டுகளில் சுமார் 39.3 பில்லியன் ரூபாய் நிகர இழப்பைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் நிதி நெருக்கடியைச் சமாளிக்க, விமான நிலையத்தின் நிர்வாகத்தை தனியார் மற்றும் அரச பங்களிப்புடன் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் புதிய தீர்மானத்தை எடுத்துள்ளது.

வருமானத்தை விட செலவு 15 மடங்கு அதிகம்
மத்தள விமான நிலையம், 2024 ஆம் நிதியாண்டில் மட்டும் 3.36 பில்லியன் ரூபாய் இயக்க இழப்பைப் பதிவு செய்துள்ளது.

இங்கு வருமானத்தை விட செலவு 15 மடங்கு அதிகமாக உள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.2024 இல் விமான நிலையத்தின் வருமானம் வெறும் 242.2 மில்லியன் ரூபாயாகும். ஆனால், அதன் இயக்கச் செலவு 3.6 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது. அங்கு ஆண்டுக்கு 10 இலட்சம் பயணிகளைக் கையாளத் திட்டமிடப்பட்ட போதிலும், கடந்த 6 ஆண்டுகளில் மொத்தம் 321,577 பயணிகள் மட்டுமே பயன்படுத்தியுள்ளனர்.

அதேவேளை கட்டுமானத்திற்காகப் பெறப்பட்ட வெளிநாட்டுக் கடன்களுக்காக ஆண்டுதோறும் சுமார் 2.05 பில்லியன் ரூபாய் வட்டிச் செலவு கணக்கிடப்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் இந்திய – ரஷ்ய கூட்டு நிறுவனம் ஒன்றிடம் விமான நிலையத்தை ஒப்படைக்க எடுக்கப்பட்டிருந்த தீர்மானத்தை தற்போதைய அரசாங்கம் இரத்து செய்துள்ளது.

அதற்குப் பதிலாக, புதிய விருப்பக் கோரல் மூலம் தனியார் பங்களிப்புடன் வணிக நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு போன்ற முக்கிய பிரிவுகள் அரசாங்கத்தின் கீழேயே இருக்கும்.

அதேவேளை, சரக்கு கையாளுதல், விமானப் பராமரிப்பு மற்றும் விருந்தோம்பல் போன்ற துறைகள் தனியார் முதலீடுகளுக்குத் திறந்துவிடப்படவுள்ளன. தற்போதைய 2025/2026 குளிர்கால பருவத்தில் ரஷ்யாவின் ரெட் விங்ஸ், பெலாரஸின் பெலாவியா மற்றும் உக்ரைனின் ஸ்கை அப் விமான நிறுவனங்கள் மத்தளத்திற்குச் சேவைகளை ஆரம்பித்துள்ளன.

எனினும் இந்த வருமானங்கள் விமான நிலையத்திற்குச் சற்று புத்துயிர் அளித்திருந்தாலும், பாரிய கடன் சுமைகளை ஈடுகட்ட இந்த வருமானம் போதுமானதாக இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.