காஷ்மீரில் தேர்தல் நடத்த பா.ஜனதாவுக்கு இனி தைரியம் இருக்காது: உமர் அப்துல்லா!!

கர்நாடகாவில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து உள்ளது. அங்கு ஆளும் பா.ஜனதா படுதோல்வியை சந்தித்து உள்ளது. இந்த வெற்றிக்காக காங்கிரஸ் கட்சிக்கு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கர்நாடகாவில் பா.ஜனதா கட்சி, ஆட்சியை இழந்துள்ளதால் காஷ்மீரில் இனி சட்டசபை தேர்தல் நடக்குமா? என அந்த மாநில முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாடு கட்சி துணைத்தலைவருமான உமர் அப்துல்லா சந்தேகம் வெளியிட்டு உள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘கர்நாடகா தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், காஷ்மீரில் தற்போதைக்கு சட்டமன்றத் தேர்தலை நடத்த பா.ஜனதாவுக்கு தைரியம் வர வாய்ப்பில்லை’ என குறிப்பிட்டு உள்ளார். காஷ்மீரில் கடந்த 2014-ம் ஆண்டுக்குப்பின் சட்டசபை தேர்தல் நடைபெறவில்லை. அங்கு விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என பா.ஜனதா அல்லாத கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.