;
Athirady Tamil News

அகமதாபாத் விமான விபத்து: குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டது

0

அகமதாபாத்: ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடல் டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி, “ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தார். இன்று காலை சுமார் 11:10 மணியளவில் அவரது டிஎன்ஏ பொருந்தியுள்ளது. அவர் பல ஆண்டுகளாக குஜராத் மாநில மக்களுக்காக உழைத்தார்.” என்று தெரிவித்தார்.

முன்னதாக, அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த 241 பேரில் விஜய் ரூபானியும் ஒருவர் என்ற செய்தியை மத்திய ஜல் சக்தி அமைச்சரும், குஜராத் பாஜக தலைவருமான சி.ஆர். பாட்டீல் உறுதிப்படுத்தினார். அவர், “இது மிகவும் சோகமான சம்பவம். பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் என் இரங்கல். முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியை விபத்தில் இழந்துவிட்டோம், இது பாஜக குடும்பத்திற்கு மிகவும் வருத்தமளிக்கிறது.” என்று கூறினார்.

68 வயதான விஜய் ரூபானி, குஜராத்தின் முதல்வராக ஆகஸ்ட் 2016 முதல் செப்டம்பர் 2021 வரை பணியாற்றினார். முக்கியமாக கரோனா பேரிடருக்குப் பிந்தைய நெருக்கடியான காலகட்டங்களில் மாநிலத்தை சிறப்பாக வழிநடத்தினார். அமைதியான நடத்தை மற்றும் நிர்வாகத் தலைமைக்கு பெயர் பெற்ற ரூபானி, அரசியல் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு அனைவராலும் மதிக்கப்பட்டார்.

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் தற்போது வரை 31 பேரின் உடல்கள் டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. 12 உடல்கள் அந்தந்த குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மற்றவர்கள் வந்து தங்கள் உறவினர்களின் உடல்களை சேகரிப்பதற்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்று இன்று காலையில் பி.ஜே. மருத்துவக் கல்லூரி மற்றும் சிவில் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பேராசிரியர் டாக்டர் ரஜ்னிஷ் படேல் தெரிவித்திருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.