;
Athirady Tamil News

கர்நாடகத்தில் காங்கிரசின் இலவச திட்டங்களை செயல்படுத்த ஆண்டுக்கு ரூ.75 ஆயிரம் கோடி தேவை: சாத்தியமாகுமா? !!

0

கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில், காங்கிரஸ் கட்சி 130-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஏராளமான இலவச திட்டங்களை காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. அவற்றில் முக்கியமான 5 திட்டங்களில், பெண்களுக்கு மாதம் தலா ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகை, வீடுகளுக்கு தலா 200 யூனிட் இலவச மின்சாரம், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தலா 10 கிலோ அரிசி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் தலா ரூ.3 ஆயிரம், அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் ஆகியவை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த இலவச திட்டங்கள் காங்கிரஸ் வெற்றிக்கு கை கொடுத்தது என்றால், அது மிகையாகாது. இந்த இலவச திட்டங்கள் காங்கிரசின் பொய் வாக்குறுதி என்று பிரதமர் மோடி, அமித்ஷா, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, பசவராஜ் பொம்மை உள்ளிட்ட தலைவர்கள் கூறினார்கள். ஆனாலும் வீடு, வீடாக உத்தரவாத அட்டையை காங்கிரஸ் வழங்கியதுடன், மந்திரிசபையின் முதல் கூட்டத்திலேயே இலவச திட்டங்களுக்கு அனுமதி வழங்குவோம் என தலைவர்கள் கூறினார்கள். பா.ஜனதாவும் அரை லிட்டர் பால் இலவசம் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்திருந்தது.

ஜனதாதளம் (எஸ்) கட்சியும் ஆண்டுக்கு 5 இலவச கியாஸ் சிலிண்டர்கள் உள்ளிட்ட இலவசங்களை அறிவித்திருந்தது. இந்த நிலையில், காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளதால், அந்த கட்சி அறிவித்த இலவச திட்டங்களை நிறைவேற்றுமா?, அது சாத்தியமாகுமா?, இதற்காக ஆண்டுக்கு எத்தனை கோடி ரூபாய் தேவை? என்பதை பற்றி பார்க்கலாம். அதாவது வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதற்காக ஆண்டுக்கு சராசரியாக ரூ.25 ஆயிரத்து 800 கோடி தேவை ஆகும். அதுபோல், பி.பி.எல்.(வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினர்) கார்டு வைத்திருக்கும் பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்குவதற்காக ஆண்டுக்கு சராசரியாக ரூ.30 ஆயிரம் கோடி தேவையாகும். ஏனெனில் மாநிலம் முழுவதும் 1.28 கோடி பெண்கள் பி.பி.எல். கார்டு வைத்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மாதம் ரூ.2 ஆயிரம் வழங்க ரூ.30 ஆயிரம் கோடி தேவை என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்வதற்காக ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் கோடி தேவைப்படும் என கருதப்படுகிறது.

இதுதவிர வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கவும், 10 கிலோ இலவச அரிசி வழங்குவதற்காகவும் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடி முதல் ரூ.17 ஆயிரம் கோடி வரை தேவைப்படும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். ஒட்டு மொத்தமாக காங்கிரஸ் அளித்துள்ள முக்கியமான இந்த 5 வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதற்கு ஆண்டுக்கு ஏறக்குறைய ரூ.75 ஆயிரம் கோடி தேவையாகும். கடந்த 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்-மந்திரியாக இருந்த பசவராஜ் பொம்மை ரூ.3 லட்சம் கோடிக்கு தாக்கல் செய்திந்தார். அதே நேரத்தில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த சித்தராமையா ரூ.1 லட்சத்து 28 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருந்தார். கடந்த பா.ஜனதா ஆட்சியில் அந்த கடன் ரூ.3 லட்சம் கோடியை தாண்டியது.

இதன்மூலம் கர்நாடக அரசுக்கான கடன் தொடர்ந்து அதிகரித்து வருவதுடன், அந்த கடனுக்காக செலுத்த வேண்டிய வட்டியும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தற்போது காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள திட்டங்களை நிறைவேற்றுவதற்காக மேலும் கடன் வாங்க வேண்டிய நிலை தான் ஏற்படும். இதனால் தான் காங்கிரசால் இலவச திட்டங்களை நிறைவேற்ற முடியுமா?, அது சாத்தியமாகுமா? என்ற கேள்வியை பொருளாதார நிபுணர்கள் எழுப்பி உள்ளனர். என்றாலும், காங்கிரஸ் அளித்துள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா? அதற்காக தலைவர்கள் எடுக்கும் நடவடிக்கை என்ன? என்பதை பொருத்திருந்ததுதான் பார்க்க வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.