;
Athirady Tamil News

மோடி அலை ஆக்கிரமித்தாலும் ராகுல் காந்தி செல்வாக்கு அதிகரிப்பு- புதிய கருத்துக்கணிப்பில் தகவல்!!

0

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதையடுத்து ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தற்போது யாருக்கு ஆதரவு அதிகம் இருக்கிறது என்பதை அறிய பொதுமக்களிடம் புதிதாக கருத்துக்கணிப்பை நடத்தியது. கடந்த 10-ந்தேதி 19-ந்தேதி வரை நாடு முழுவதும் 19 மாநிலங்களில் 71 பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுமார் 7,202 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. இந்த கருத்துக்கணிப்பில் பிரதமர் மோடி இன்னும் செல்வாக்கு மிக்க தலைவராக திகழ்ந்து வருகிறார் என்பது தெரியவந்தது.

அதேசமயத்தில் காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வரும் ராகுல் காந்திக்கு பாரத ஒற்றுமை யாத்திரைக்கு பிறகு 15 சதவீதம் செல்வாக்கு அதிகரித்து உள்ளதும் தெரியவந்து இருக்கிறது. 43 சதவீத பொதுமக்கள் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கூட்டணி 3- வது முறையாக வெற்றி பெறும் என தெரிவித்து உள்ளனர். 38 சதவீதம் பேர் இந்த ஆட்சி வேண்டாம் என சொல்லி இருக்கிறார்கள். இன்று தேர்தல் நடந்தாலும் பாரதிய ஜனதாவை ஆதரிப்போம் என 40 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளனர். காங்கிரஸ் கட்சியை 29 சதவீதம் பேர் ஆதரித்து உள்ளனர். பாரதிய ஜனதாவுக்கு 2019-ம் ஆண்டு 37 சதவீதம் இருந்தது.

இது தற்போது 39 சதவீதமாக அதிகரித்து உள்ளது. காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு 19 சதவீதத்தில் இருந்து 29 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது. 2019-ம் ஆண்டு யார் பிரதமராக வர வேண்டும்? என நடந்த கருத்துக்கணிப்பில் மோடிக்கு 44 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து இருந்தனர். தற்போது இது 43 சதவீதமாக குறைந்து இருக்கிறது. அதேசமயம் ராகுல் காந்திக்கு இருந்த ஆதரவு 24 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக உயர்ந்து உள்ளது. இருந்த போதிலும் பிரமதர் மோடியின் செல்வாக்கு இன்னும் குறையவில்லை என்பதை இந்த கருத்துக்கணிப்பு காட்டுகிறது. 25 சதவீதம் பேர் மோடியின் பேச்சுதிறமையை விரும்புவதாகவும், 20 சதவீதம் பேர் அவரது வளர்ச்சி திட்டங்களை ஆதரிப்பதாகவும், 13 சதவீதம் பேர் அவரது கடுமையான உழைப்பை பாராட்டுவதாகவும் தெரிவித்து உள்ளனர்.

மேலும் அவரது கவர்ச்சி தங்களை வெகுவாக ஈர்த்து இருப்பதாக 13 சதவீதம் பேரும் அவரது கொள்கை தங்களுக்கு பிடித்து உள்ளதாக 11 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளனர். இம்மாதம் நடந்த கர்நாடக தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த சூழ்நிலையில் அக்கட்சியினருக்கு மேலும் உற்சாகத்தை கொடுக்கும் வகையில் ராகுல் காந்தியின் செல்வாக்கும் கடந்த தேர்தலை விட தற்போது சற்று அதிகரித்து உள்ளது. ராகுல் காந்தி சமீபத்தில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டார். இந்த யாத்திரைக்கு பிறகு அவரது செல்வாக்கு 15 சதவீதம் அதிகரித்து உள்ளது. 55 சதவீத மக்கள் மத்திய அரசின் திட்டங்களில் திருப்தி அடைந்துள்ளதாக தெரிவித்து இருக்கிறார்கள்.

அடுத்த பிரதமராக யாரை ஆதரிக்கிறீர்கள் என்பதற்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோரை தவிர மேற்குவங்க முதல்- மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு 4 சதவீதம் பேரும், உத்தரபிரதேச முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவுக்கு 3 சதவீதம் பேரும், நிதிஷ் குமாருக்கு 1 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இந்த புதிய கருத்துக்கணிப்பின் மூலம் பிரதமர் மோடி இந்தியாவில் தொடர்ந்து புகழ்பெற்ற தலைவராக இருந்து வருவது தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் மோடி அலை ஆக்கிரமித்துள்ள போதிலும் ராகுல் காந்திக்கும் ஆதரவு அதிகரித்து இருப்பது அக்கட்சியினருக்கு புது தெம்பை கொடுத்து இருக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.