செய்யாத குற்றத்துக்காக 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த ஜேர்மானியர்
தான் செய்யாத குற்றத்துக்காக 13 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ஜேர்மானியர் ஒருவருக்கு ஜேர்மன் மாகாண அரசு ஒன்று இழப்பீடு வழங்கியுள்ளது.
செய்யாத குற்றத்துக்காக 13 ஆண்டுகள் சிறை
2010ஆம் ஆண்டு, பவேரியா மாகாணத்தைச் சேர்ந்த, கட்டுமானப் பணி கண்காணிப்பாளராக பணியாற்றிய ஜேர்மானியரான Manfred Genditzki என்பவர், வயதான பெண்மணி ஒருவரின் மரணம் தொடர்பில் சிறையிலடைக்கப்பட்டார்.
Rottach-Egern என்னுமிடத்தைச் சேர்ந்த அந்த பெண்மணி, 2008ஆம் ஆண்டு தனது குளியல் தொட்டியில் இறந்துகிடந்தார்.
அந்தப் பெண்மணியின் மரணம் தொடர்பில் Genditzki சிறையில் அடைக்கப்பட்டதுமே, தடயவியல் நிபுணர்கள் அந்தப் பெண்மணியின் மரணத்துக்கும் Genditzkiக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவது குறித்து சந்தேகம் எழுப்பினார்கள்.
2018ஆம் ஆண்டு, உள்ளூர் மற்றும் மாகாண சட்டத்தரணிகள் Genditzki தவறுதலாக தண்டிக்கப்பட்டதாக கருத்துக்கள் முன்வைத்தார்கள்.
நீண்ட வழக்கு விசாரணையைத் தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு, Genditzki சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
அத்துடன், 2023ஆம் ஆண்டு, அந்தப் பெண்மணியின் மரணம் விபத்தாக இருக்கக்கூடும் என முடிவு செய்து, Genditzki குற்றமற்றவர் என நீதிமன்றம் அறிவித்தது.
என்றாலும், செய்யாத குற்றத்துக்காக 13ஆண்டுகள் அல்லது 4916 நாட்கள் சிறையில் செலவிட்டிருந்தார் Genditzki.
Genditzki விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது சட்டத்தரணிகள் இழப்பீடு கோரி பவேரியா மாகாண அரசு மீது வழக்குத் தொடர்ந்தனர்.
அந்த வழக்கில் தற்போது Genditzkiக்கு 1.3 மில்லியன் யூரோக்கள் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக மாகாண நீதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.