;
Athirady Tamil News

இந்தியாவில் 10 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம்: பிரதமர் மோடி பங்கேற்ற ஜப்பான் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவால் அதிர்ச்சி!!

0

ஜப்பானில் நடந்த ஜி-7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்ற நிலையில், ரஷ்ய வைரங்களுக்கு அந்த நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அதனால் இந்தியாவில் 10 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன் மீதான ரஷ்ய போருக்கு நேட்டோ உட்பட பெரும்பாலான நாடுகள் தொடர்ந்து கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ரஷ்யாவிற்கு பொருளாதார மற்றும் எரிசக்தி மூலமாக பல்வேறு நெருக்கடியை ஐரோப்பிய நாடுகள் கொடுத்து வருகின்றன. ரஷ்யாவுடனான வர்த்தகத்தில் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், அங்கிருந்து கச்சா எண்ணெயை இந்தியா தொடர்ந்து வாங்குகிறது. இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள், ரஷ்யாவின் கச்சா எண்ணெயை குறைந்த விலையில் வாங்கி, அதிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட டீசலை ஐரோப்பிய நாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது.

இந்தக் கொள்கையால் இந்தியா – ரஷ்யா இடையிலான வர்த்தகம் மேம்பட்டுள்ளது. இருப்பினும், ரஷ்யாவுடனான வர்த்தகம் மற்றொரு துறைக்கு சறுக்கலை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சமீபத்தில் ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடைபெற்ற ஜி-7 நாடுகளின் கூட்டத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ‘ரஷ்யாவின் வருவாயைக் குறைக்க, ரஷ்யாவில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட அல்லது உற்பத்தி செய்யப்படும் வைரங்களின் வர்த்தகம் மற்றும் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உள்ளோம். இதுதொடர்பாக எங்கள் தரப்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தடையை திறம்பட செயல்படுத்த ‘டிரேசிங்’ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

ரஷ்யாவுக்கு எதிராக ஜி-7 நாடுகள் இந்தத் தடைகளை அறிவித்த நாளில், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கும், ரஷ்ய வைரங்களை இறக்குமதி செய்ய தடை விதிப்பதாக அறிவித்தார். ஏற்கனவே கடந்த 2022 ஏப்ரலில், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, நியூசிலாந்து, பஹாமாஸ் ஆகியவை ரஷ்ய வைர சுரங்க நிறுவனமான அல்ரோசாவுடனான வர்த்தகத்தை நிறுத்திவிட்டன. ரஷ்யாவின் வைர வர்த்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டதால், இந்தியாவில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலையிழப்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளால், ரஷ்யாவின் வருவாய் சுமார் 50 சதவீதம் குறைந்துள்ளது.

வைர ஏற்றுமதியை ஊக்குவிப்பதன் மூலம் இழப்பை ஈடுசெய்ய ரஷ்யா முயன்றது. கடந்த 2021ம் ஆண்டில் வைர ஏற்றுமதி மூலம் சுமார் 4 பில்லியன் டாலரை ரஷ்யா சம்பாதித்தது. ரஷ்யாவின் இந்த வருவாயை முடக்கும் வகையில், அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து ரஷ்ய வைர வர்த்தகத்தில் கடுமையான பொருளாதாரத் தடைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்து வருகின்றன. இதுகுறித்து வைரம், ரத்தினம் மற்றும் நகை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தலைவர் விபுல் ஷா கூறுகையில், ‘உலகில் உள்ள வைரங்களில் 90 சதவீதம் இந்தியாவில் மெருகூட்டப்படுகின்றன. இவற்றில் ரஷ்ய வைரங்களும் அடங்கும். ரஷ்யாவில் உள்ள அல்ரோசா நிறுவனத்திடம் இருந்து வைரங்களை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. உலகின் மொத்த வைரங்களில் சுமார் 30 சதவீதம் அல்ரோசாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இறக்குமதி செய்யப்பட்ட வைரங்களை இந்திய வைர நிறுவனங்கள் பாலிஷ் செய்து விற்கின்றன. அவை ஜி-7 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உக்ரைன் மீதான போரால், ரஷ்யா மீது ஜி-7 நாடுகள் புதிய புதிய தடைகளை விதித்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக வைர வர்த்தகத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ரஷ்யா மீதான இந்த தடை நீடித்தால், இந்தியாவில் (குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வைரங்கள் மெருகூட்டப்படுகிறது) வைர தொழிலில் ஈடுபட்டுள்ள 10 லட்சம் பேரின் வேலைவாய்ப்பு பறிபோகும்’ என்று கவலையுடன் தெரிவித்தார். ஜப்பானில் நடந்த ஜி-7 நாடுகளின் உச்சி மாநாட்டில், நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பின்படி பிரதமர் மோடியும் கலந்து கொண்டார். இந்த நிலையில் ரஷ்ய வைர வர்த்தகத்திற்கு எதிராக ஜி-7 நாடுகள் எடுத்துள்ள முடிவு, இந்திய வைர தொழிலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. பிரதமர் மோடி கலந்து கொண்ட உச்சி மாநாட்டில், இப்படிபட்ட முடிவு எடுக்கப்பட்டது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.