;
Athirady Tamil News

ராஜா ரகுவன்ஷிக்கு மாந்திரீகம் செய்த சோனம்! தந்தை குற்றச்சாட்டு!

0

திருமணமானவுடன் தனது மகனுக்கு சோனம் மாந்திரீகம் செய்ததாக ராஜா ரகுவன்ஷியின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தூரைச் சேர்ந்த புதுமணத் தம்பதியான ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் திருமணமாகி சில நாள்களில் அஸ்ஸாம் மற்றும் மேகாலயாவுக்கு தேனிலவுக்குச் சென்றனர்.

தேனிலவுக்கான முழு ஏற்பாட்டையும் செய்த மனைவி சோனம், தனது காதலுடன் இணைந்து மேகாலயாவில் வைத்து கணவரைக் கொலை செய்தார்.

காவல்துறையின் விசாரணையில் ராஜா ரகுவன்ஷியை, சோனம் மற்றும் அவரது காதலன் ராஜ் குஷ்வாஹாவுடன் இணைந்து 3 இளைஞர்கள் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஜாவுக்கு சோனம் மாந்திரீகம்

”ராஜா ரகுவன்ஷிக்கு சோனம் மாந்திரீகம் செய்து வைத்ததாக அவரின் தந்தை அசோக் ரகுவன்ஷி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது, “திருமணமானவுடன் ஒரு முடிச்சை ராஜாவுடன் கொடுத்து வீட்டின் முன்பகுதியில் சோனம் கட்டவைத்தார். வீட்டில் தீய சக்தி அண்டாமல் இருக்க என்று சோனம் தெரிவித்திருந்தார்.

ஆனால், ராஜாவின் கொலைக்கு பிறகு அது எனது மகனுக்கு வைக்கப்பட்ட மாந்திரீகமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

தற்போது அந்த முடிச்சு வீட்டின் முன்பகுதியில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. குற்றவாளிகள் அனைவருக்கும் தூக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

ராஜா ரகுவன்ஷியின் தாயார் உமா கூறுகையில், தனது மகன் மற்றும் சோனம் ஜாதகம் செவ்வாய் கிரகத்துடன் ஒத்துப்போனதால் ஜோதிடர் பரிந்துரைத்தபடி, பாரம்பரிய முறையில் திருமணம் நடத்தப்பட்டது.

திருமணத்துக்கு பிறகு நான்கு நாள்கள் மட்டுமே சோனம் எங்கள் வீட்டில் தங்கியிருந்தார். பிறகு முறைப்படி, அவரின் அம்மா வீட்டுக்குச் சென்றார். மகிழ்ச்சியுடன் அவரது தாய் வீட்டுக்கு அனுப்பிவைத்தேன்.

சோனத்தை எப்போதாவது சந்தித்தால், என் மகனைக் கொன்றது ஏன்? என்ற கேள்வியை மட்டும் கேட்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

வாக்குமூலம்

குற்றவாளிகள் அளித்த வாக்குமூலம் குறித்து மேகாலயா காவல்துறையினர் வெளியிட்ட தகவலில்,

”இந்த ஒட்டுமொத்தக் கொலைக்கும் பின்னணியில் மூளையாக இருந்தது ராஜ் குஷ்வாஹா என்றும், இந்த கொலைத் திட்டம் இந்தூரில் திட்டமிடப்பட்டு, செயல்படுத்தப்பட்டுள்ளது. ராஜா ரகுவன்ஷி – சோனம் திருமணத்துக்கு முன்பே கொலைத் திட்டம் உருவாக்கப்பட்டுவிட்டதாகவும், ஏற்கனவே போட்ட மூன்று திட்டங்கள் கொலையில் முடியாமல், நான்காவது திட்டம்தான் நிறைவேறியதாக குற்றவாளிகள் தெரிவித்தனர்.

குறிப்பாக, திருமணம் மே மாதம் நடைபெற்ற நிலையில், கொலைத் திட்டம் பிப்ரவரி மாதமே தீட்டப்பட்டிருந்ததும், ஒன்று, ஆற்றில் சோனம் அடித்துச் செல்லப்பட்டதாக நாடகமாடுவது அல்லது, ஒரு பெண்ணைக் கொன்று எரித்துவிட்டு சோனம் என நாடகமாடுவது என்ற திட்டங்களும் கொலைச் சதியில் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.