;
Athirady Tamil News

பர்ன்ஃபூட் ஏரி: ஸ்காட்லாந்து – உதகை தொடர்பை காட்டிய ஏரி இப்போது எங்கே? ஆவணங்களில் கூட இல்லாமல் போனது எப்படி?!!

0

நீலகிரி மலையில் உதகைக்கும், ஸ்காட்லாந்திற்கும் ஏற்பட்ட ஒரு வரலாற்றுத் தொடர்பை ஒரு மீன் வகை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

ஸ்காட்லாந்தின் பர்ன்ஃபூட் ஏரியில் (Burnfoot Lake) காணப்படும் ட்ரௌட் (trout) என்ற மீன் வகையை, ஆங்கிலேயர்கள் பல கட்ட முயற்சிக்குப் பின்னர் நீலகிரி மலைக்கு கொண்டுவந்து வளர்த்தனர்.

தற்போதும் அந்த மீன் நீலகிரி மலையின் பல இடங்களில் காணப்படுகிறது. ஆனால், அந்த டரௌட் மீன் குஞ்சுகள் வளர்க்க பயன்படுத்தப்பட்ட ஏரியை காணவில்லை என்றால் நம்பமுடிகிறதா?

ஆங்கிலேயரின் வருகைக்குப் பின்னர், நீலகிரி மலை நவீன நீலகிரியாக மாறியதை குறிக்கும் 200வது ஆண்டு அனுசரிக்கப்படும் இந்த வேளையில், அங்குள்ள சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள், காணாமல் போன பர்ன்ஃபூட் ஏரியை அரசாங்கம் மீட்டுருவாக்கம் செய்யவேண்டும் என்கிறார்கள். அந்த ஏரி இருந்ததற்கு ஒரே சாட்சியாக இருக்கும் இந்த ட்ரௌட் மீன் மலையில் உள்ள நீராதாரங்களில் வளர்ந்து செழிப்பதற்கு முயற்சிகள் எடுக்கவேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

தோடர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பூமந்த்தேவி, பர்ன் ஃபூட் ஏரியின் கரையில் அவரது குடும்பம், 80க்கும் மேற்பட்ட எருமைகளை கொண்டுவந்து மேய்ச்சலில் ஈடுபட்டது குறித்து நினைவுகூர்ந்தார்

நாம் சந்தித்த பல தோடர் இன மக்களும் பர்ன்ஃபூட் ஏரி ‘தலையாட்டி மந்த்’ என்ற தோடர்களின் வசிப்பிடத்திற்கு அருகில் இருந்ததை உறுதிப்படுத்தினர். 70 வயதை எட்டவிருக்கும் தோடர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பூமந்த் தேவி, பர்ன்ஃபூட் ஏரியின் கரையில் அவரது குடும்பம், 80க்கும் மேற்பட்ட எருமைகளை கொண்டுவந்து மேய்ச்சலில் ஈடுபட்டது குறித்து நினைவுகூர்ந்தார்.

”சிறுவயதில் அம்மா அப்பாவுடன் இங்கு நான் வந்திருக்கிறேன். எருமைகளை மேய்த்துவிட்டு, மாலை நேரம் வரை இங்கு மேய்ச்சல் செய்துவிட்டு கிளம்புவோம். இந்த ஏரி கொஞ்சம் காலம், தூர்வாரப்படாமல் இருந்தது. பின்னர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. தற்போது விவசாய நிலமாக மாறிவிட்டது.

சிறுவயதில் நீலகிரி மலையில் நான் பார்த்த பர்ன்ஃபூட் ஏரி உள்பட பல நீர்நிலைகள், புல்வெளிகள் தற்போது இல்லை. மேய்ச்சல் இடம் குறைந்துவிட்டதால், எங்களைப் போன்ற பல தோடர் குடும்பத்தினர், பாரம்பரியமான மேய்ச்சல் தொழிலில் இருந்து விலகிவிட்டோம்,” என்கிறார் பூமந்த் தேவி.

ஆங்கிலேயர் காலத்தில் உதகை நகரத்திற்கு முக்கிய நீராதாரமாக விளங்கியது பர்ன்ஃபூட் ஏரி. தற்போது அந்த ஏரி இருந்த இடம் முற்றிலுமாக விவசாய பூமியாக மாறிவிட்டது. அருகில் கேளிக்கை விடுதிகள் கட்டப்பட்டுள்ளதை நாம் நேரில் பார்த்தோம்.

1908-இல் பர்ன்ஃபூட் ஏரி குறித்து ஆங்கிலேயர்கள் பதிவு செய்த குறிப்பு ஒன்று மெட்ராஸ் கெஜட்டில் (Madras Gazette) இடம்பெற்றுள்ளது

1908-இல் பர்ன்ஃபூட் ஏரி குறித்து ஆங்கிலேயர்கள் பதிவு செய்த குறிப்பு ஒன்று மெட்ராஸ் கெஜட்டில் (Madras Gazette) இடம்பெற்றுள்ளது. அதில் இந்த ஏரியில் ஸ்காட்லாந்து ட்ரௌட் மீன் வகையை அறிமுகம் செய்ததாகப் பதிவுசெய்துள்ளனர்.

இந்த ஏரியில் ஸ்காட்லாந்து ட்ரௌட் மீன் வகையை அறிமுகம் செய்ததாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது

ட்ரௌட் மீன் வகை தென்னிந்தியாவில் நீலகிரி மலையில் மட்டும்தான் காணப்படுகிறது என்றும், இந்த மீன் வளர்வதற்கான தகுதியான இடமாக பர்ன்ஃபூட் ஏரி இருந்தது என்றும் சுட்டிக்காட்டுகிறார் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் மற்றும் எழுத்தாளர் ஜனார்த்தனன். பர்ன்ஃபூட் ஏரியை மீட்பதற்காகப் பலவிதமான சட்டபோராட்டங்களை மேற்கொண்டுவருகிறார் இவர்.

“பர்ன்ஃபூட் ஏரியில் மிகவும் தூய்மையான தண்ணீர் இருந்தது. ட்ரௌட் மீன் நிலைத்த நீரில் வளராது. ஓடக்கூடிய தெளிவான நீரில்தான் அது இருக்கும். பர்ன்ஃபூட் ஏரி ஸ்காட்லாந்தில் உள்ளது. அடுத்ததாக ஊட்டியில் இருந்தது. ஊட்டியில் அந்த ஏரி இருந்த சுவடு கூட தற்போது இல்லை,” என்கிறார் ஜனார்த்தனன்.

பர்ன்ஃபூட் ஏரி தொட்டபெட்டாவில் இருந்து தொடங்கி ஊட்டி, லவ்டேல், பிஷப் டவுன், மஞ்சனக்கொரை என பரந்து விரிந்திருந்தது என்றும் காலப்போக்கில் விளைநிலங்களாக மாற்றப்பட்டு, அதன் வடிகால்கள், நீராதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்றும் விளக்குகிறார் ஜனார்த்தனன்.

பர்ன்ஃபூட் ஏரியில் காணப்பட்ட ‘ட்ரௌட்’ மீன் வகையை தமிழ்நாடு மீன்வளத்துறை பண்ணை அமைத்து வளர்த்துவருகிறது. பிபிசி தமிழிடம் பேசிய மீன் வளர்ப்பு மையத்தின் துணை இயக்குனர் ஜோதி லட்சுமணன், ட்ரௌட் மீன் 5 டிகிரி செல்சியஸ் முதல் 20 டிகிரி செல்சியஸ் வெப்பம் உள்ள பகுதிகளில் மட்டுமே வாழும் என்றார்.

“ஆங்கிலேயர் காலத்தில் இந்த மீன் வகை இங்கு அறிமுகம் செய்யப்பட்டது. அந்தக் காலத்தில் உதகை நகரப்பகுதியில் இருந்த பர்ன்ஃபூட் ஏரியில் இவை அதிகளவில் இருந்தன என்று குறிப்புகள் உள்ளன. தற்போது, நீலகிரி மாவட்டத்தில் அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு ஆகிய இடங்களில் உள்ள நீர்நிலைகளில் வளர்கின்றன. இந்தியாவில், காஷ்மீர், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களைத் தவிர தமிழ்நாட்டில், அதுவும் நீலகிரியில் மட்டும்தான் இவை காணப்படுகின்றன,” என்றார்.

மேலும், நீலகிரி மலையைத் தவிர பிற மாவட்டங்களில் தட்பவெப்ப சூழலில் ட்ரௌட் மீன் வளர்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால், இந்த மீனை பிற இடங்களில் வளர்க்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

பர்ன்ஃபூட் ஏரியைப் போல சதுப்பு நிலத்துடன் கூடிய நீர்நிலைகள் மற்றும் புல்வெளிகள் கான்க்ரீட் நிலங்களாக மாறுவது சுற்றுச்சூழலில் அபாயத்தை ஏற்படுத்தும் என சான்றுகளுடன் நிறுவுகிறார் சுற்றுச்சூழல் நிபுணர் மோகன்ராஜ்.

“நீலகிரி மலையின் நிலப் பயன்பாடு தொடர்ச்சியான மாற்றங்களை சந்தித்தது வருகிறது. இந்தியப் புவியியல் ஆய்வு அமைப்பின் அறிக்கையின்படி, நீலகிரி மலையில் 200க்கும் மேற்பட்ட பகுதிகள் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. நிலப் பயன்பாடு மாற்றம் காரணமாக, 20 ஆண்டுகளில் ஐந்து மோசமான நிலச்சரிவுகளையும் நீலகிரி சந்தித்துவிட்டது. பர்ன்ஃபூட் ஏரி இருந்ததற்கு ஆதாரமாக, ட்ரௌட் மீன் மட்டுமே சாட்சியாக இருப்பதுபோல, நீலகிரி மலை இருந்ததற்கு சாட்சியாக சில மனிதர்கள் மட்டுமே இங்கு மிஞ்சும் நாள் வெகுதொலைவில் இல்லை,” என்கிறார் மோகன்ராஜ்.

நீலகிரியில் அதிகரித்து வரும் நகரமயமாக்கல் மற்றும் சுற்றுலாத் துறையின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மோகன்ராஜ் உள்ளிட்ட பல சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் முன்வைத்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அமிர்த் நீலகிரி மாவட்டம் சந்தித்துவரும் நிலப்பயன்பாடு மாற்றத்தை சரிப்படுத்தும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகச் சொல்கிறார்

இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அமிர்த்திடம் பேசினோம்.

அவர், நீலகிரி மாவட்டம் சந்தித்துவரும் நிலப் பயன்பாடு மாற்றத்தை சரிப்படுத்தும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக சொல்கிறார். “விதிகளை மீறி கட்டப்பட்ட கேளிக்கை விடுதிகளுக்குச் சீல் வைக்கப்பட்டதாகத் தெரிவித்தார். ஆனால் விடுதி நடத்துவோர், விதிமீறலை சரிசெய்வதாக கூறி நீதிமன்ற ஆணை பெற்றுவந்தால் அதனை தடுக்க முடியாது. நீலகிரி போன்ற சுற்றுச்சூழல் அபாயம் கொண்ட (Eco-sensitive) இடத்தில் எத்தனை விடுதிகள் இருக்க வேண்டும் எனச் சட்டப்படி நிர்ணயம் செய்யப்படவில்லை என்பதால், புதிய விடுதிகளுக்கு ஒப்புதல் கொடுப்பதை தள்ளிப்போட முடியாது. குறைந்தபட்சம், ஆக்கிரமிப்பு செய்யப்படும் நிலங்களை மீட்டுவருகிறோம்,” என்கிறார்.

பர்ன்ஃபூட் ஏரி குறித்த விவரங்களைக் கேட்டபோது, அந்த ஏரி குறித்து வரலாற்று ஆவணங்கள் இருந்தாலும், இந்திய சுதந்திரத்திற்கு பின்னர், அந்த ஏரி இருந்ததற்கான வருவாய்த்துறை ஆவணங்கள் எதுவும் தற்போது வரை கிடைக்கவில்லை என்றார் அமிர்த். அதற்கான ஆவணங்கள் தேடப்பட்டு வருவதாக அமிர்த் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.