பாலின சமத்துவ சட்டமூலத்தின் முதலாம் வரைபு நிறைவு!!
பாலின சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுவது தொடர்பான சட்டமூலத்தின் முதலாம் வரைபு நிறைவடைந்துள்ளதாக இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமைகள் மீறல்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல் பற்றி ஆராய்ந்து அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் தெரியவந்தது.
விசேட குழு அதன் தலைவர் பாரளுமன்ற உறுப்பினர் (வைத்தியகலாநிதி) சுதர்ஷனி
பர்னாந்துபுல்லே தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம்
தொடர்பில் தெரியவந்தது.
பெண்களுக்கான தேசிய ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிப்பது, பெண் உரிமை தொடர்பில்
ஓம்புட்ஸ்மன் ஒருவரை நியமித்தல் உள்ளிட்ட பொறிமுறையொன்றை நிறுவுதல், பெண்களின்
உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அந்த உரிமைகளை மீறும் போது ஆணைக்குழுவினால்
எடுக்கக்கூடிய சட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த
சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டமூலம் தொடர்பில் பொதுமக்கள், பாலின நிபுணர்கள், சிவில் சமூக நிறுவனங்கள் மற்றும் பெண் உரிமை அமைப்புகளின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளுமாறு விசேட குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியகலாநிதி) சுதர்ஷனி பர்னாந்துபுல்லே இங்கு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அதற்கமைய, இந்த சட்ட மூலம் தொடர்பான கருத்துக்களை பெற்றுக்கொள்ள மகளிர், சிறுவர்
அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு மற்றும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் என்பவற்றின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் வெளியிடுவதற்கும் பத்திரிகை விளம்பரம் வெளியிடுவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரான் விக்கிரமரத்ன,
ரோஹிணி குமாரி விஜேரத்ன, (கலாநிதி) ஹரிணி அமரசூரிய மற்றும் இந்த விசேட குழுவின் செயலாளரும் பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீர மற்றும் அரசாங்க அதிகாரிகள் கலந்துகொண்டனர்.