;
Athirady Tamil News

ஹார்மூஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி: எரிபொருள் தட்டுப்பாடு நீங்குமா?

0

தெஹ்ரான்,

அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட மறுத்ததால், அந்நாடு மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் கூட்டாக தாக்குதல் நடத்தி வருகின்றன. அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார்.இதனால் கோபம் அடைந்த ஈரான், இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மற்றும் விமான நிலையங்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் வளைகுடா நாடுகளில் பதற்றம் நிலவுகிறது.

வளைகுடா நாடுகளில் இருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என ஈரான் கூறியிருந்தது. இந்த ஹார்முஸ் ஜலசந்தி பகுதி எண்ணெய் கப்பல் போக்குவரத்துக்கு மிக முக்கியமானதாக உள்ளது. இந்த பகுதியில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. இதனால் பல நாடுகளில் பெட்ரோல், டீசல், எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இதனிடையே, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து குஜராத்திற்கு வந்த சரக்கு கப்பல் மீது நேற்று ஹார்முஸ் ஜலசந்தி அருகே தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

இதன் தொடர்ச்சியாக ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி அராக்சியுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசி வாயிலாக பேசினார். இந்த பேச்சுவார்த்தையை அடுத்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய கப்பல்களுக்கு அனுமதி வழங்க ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளது.எரிபொருள் ஏற்றி வரும் கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியாவுக்கு அனுப்பலாம் என்று ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் இந்த அறிவிப்பால் இந்தியாவுக்கு எரிபொருள் தடையின்றி கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா 45 சதவீதம் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் கப்பல்கள் பெரும்பாலும் இந்த ஜலசந்தியை கடந்தே இந்தியாவுக்கு வருகை தருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.