;
Athirady Tamil News

போரை நிறுத்த வேண்டும் என்றால் இதுதான் வழி: 3 நிபந்தனைகளை விதித்த ஈரான்

0

தெஹ்ரான்,

ஈரானை கடந்த 28-ந்தேதி முதல் தாக்கி வரும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் 13-வது நாளாக இன்றும் அந்த நாட்டின் பல பகுதிகள் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசி தாக்கி வருகின்றன. போரின் தொடக்கத்தில் இருந்து இதுவரை கண்டிராத மிகவும் வலிமையான தாக்குதல்கள் தலைநகர் டெஹ்ரானில் நடந்ததாக அங்கு வசிக்கும் பொதுமக்கள் சிலர் தெரிவித்தனர்.

அங்கு இடைவிடாமல் நடந்து வரும் தாக்குதல்களால் தலைநகரில் வசித்து வரும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் ஒரு பிராந்திய போர் வெடிக்கும் சூழல் உருவானது. மேலும் இதனால் சர்வதேச அளவிலும் பாதிப்புகள் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளன.

இதற்கிடையே இந்த விவகாரத்தில் ஈரான் இறங்கி வரத் தொடங்கியுள்ளது. போரை முடிவுக்கு கொண்டு வர மூன்று நிபந்தனைகளை ஈரான் விதித்துள்ளது. இது தொடர்பாக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் கூறுகையில், ஈரானின் உரிமைகளை அங்கீகரிப்பது, எதிர்காலத் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பது, அத்துடன் போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவது ஆகியவற்றை ஏற்றுக்கொண்டால் நிச்சயம் போரை முடித்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். ஈரானுடனான போர் முடிவுக்கு வரும் எனவும், ஈரானில் இனி தாக்க எதுவும் இல்லை என்றும் டிரம்ப் கூறிய நிலையில், ஈரானும் இறங்கி வந்து இருப்பது விரைவில் போர் முடிவுக்கு வரும் சூழலை ஏற்படுத்தியுள்ளதாக பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.