இங்கிலாந்து நோக்கி வந்துகொண்டிருந்த விமானம்: 38,000 அடி உயரத்திலிருந்து திடீரென கீழ் நோக்கி இறங்கியதில் 11 பேர் காயம்
38,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானம் ஒன்று திடீரென கீழ் நோக்கி இறங்கியதால், பயணிகள் பயத்தில் ஆழ்ந்த சம்பவம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்துள்ளது.
இங்கிலாந்து நோக்கி வந்துகொண்டிருந்த விமானம்
ஞாயிற்றுக்கிழமையன்று, கரீபியன் கடலில் அமைந்துள்ள பார்படாஸ் தீவிலிருந்து இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் நோக்கி 225 பயணிகளுடன் ஏர்பஸ் விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது.
இரண்டு மணி நேரம் வானில் பறந்துகொண்டிருந்த நிலையில், காற்றில் ஏற்பட்ட திடீர் மாறுபாடு காரணமாக விமானம் திடீரென கிழ் நோக்கி இறங்கத் துவங்கியுள்ளது.
11 பயணிகள் காயம்
விமானத்தில் பயணித்த பெண் ஒருவர் அச்சத்தை ஏற்படுத்திய அந்த சம்பவம் குறித்து விவரித்துள்ளார். மான்செஸ்டரிலிருந்து புறப்பட்ட விமானம், இரண்டு மணி நேரமாக பயணித்துக்கொண்டிருந்தது. பின்னர் திடீரென கீழே விழுவதைப்போல விமானம் செங்குத்தாக வேகமாக கீழ் நோக்கி இறங்கத் துவங்கியது.
சில பயணிகள் கழிவறைக்குச் சென்றிருந்தார்கள், விமான ஊழியர்கள் பயணிகளுக்கு பானங்கள் பரிமாறிக்கொண்டிருந்தார்கள்.
விமானம் வேகமாக கீழிறங்க, நான் சீட் பெல்டை சற்று நெகிழ்த்திவிட்டிருந்ததால், இருக்கையிலிருந்து சற்று மேலே தூக்கப்பட்டேன். இருக்கையிலிருந்து வீசி எறியப்படுவேனோ என்றும், வெகுநேரமாக நான் அப்படியே இருக்கப்போகிறேன் என்றும் நான் நினைத்துக்கொண்டேன். மிகவும் அச்சத்தை ஏற்படுத்திய ஒரு சம்பவமாக அது இருந்தது என்கிறார் அந்தப் பெண்.
இந்த சம்பவத்தில் 11 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக விமானி விமானத்தை அருகிலுள்ள பெர்முடா தீவில் தரையிறக்கியிருக்கிறார். எதிர்பாராத இந்த அசம்பாவிதத்தால், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வீடு திரும்பவேண்டிய பயணிகள் அனைவரும் விமான நிறுவனம் ஏற்பாடு செய்த ஹொட்டல்களில் தங்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.