ஜேர்மனியில் புதிய அரசை அமைக்கவுள்ள ஃப்ரிட்ரிக் மெர்ஸ்., அடுத்த வாரம் சேன்சலராக பதவியேற்பு

ஜேர்மனியில் கட்சி கூட்டணிகள் உடன்பாடுக்கு வந்துள்ள நிலையில், கான்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) அடுத்த வாரம் புதிய அரசை அமைக்கவுள்ளார்.
சமூக ஜனநாயகக் கட்சி (SPD) 84.6% வாக்குகள் ஆதரவுடன் கூட்டணியை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, மெர்ஸ் மே மாதம் 7-ஆம் திகதி ஜேர்மனியின் சேன்சலராக பதவியை ஏற்க உள்ளார்.
69 வயதான மெர்ஸ், ஜேர்மனியின் பின்வாங்கிய பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கும் திட்டத்துடன் ஆட்சியை மேற்கொள்கிறார்.
குறிப்பாக இரண்டாண்டுகளாக இறங்கியுள்ள ஜேர்மனியின் பொருளாதார வளர்ச்சி, இப்போதைக்கு 0.2% வளர்ச்சியைக் கண்டுள்ளது.
மெர்ஸ், உக்ரைனுக்கு தொடர்ந்த ஆதரவை உறுதிசெய்வதுடன், பாதுகாப்பு முதலீடுகளை அதிகரித்து, இராணுவத்தை மேம்படுத்தவுள்ளார்.
முன்னாள் தலைவரான ஒலாப் ஷோல்ஸின் மூன்று கட்சி கூட்டணி கடந்த நவம்பரில் சிதைந்ததைத் தொடர்ந்து, பிப்ரவரி 23-ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் மெர்ஸ் தலைமையிலான CDU/CSU கட்சி 28.5% வாக்குகளைப் பெற்று முன்னிலை பெற்றது.
SPD உறுப்பினரான லார்ஸ் கிளிங்க்பெயல் (Lars Klingbeil), நிதியமைச்சராகவும் துணை அதிபராகவும் நியமிக்கப்பட உள்ளார்.