துருக்கியில் தடை செய்யப்படும் எலான் மஸ்கின் க்ரோக்! காரணம் என்ன?
துருக்கி அதிபர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் குறித்து அவதூறு கருத்துக்களைத் தெரிவித்த, எலான் மஸ்கின் ‘க்ரோக்’ எனும் செய்யறிவு பாட்-க்கு (BOT), அந்நாட்டு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
எலான் மஸ்கின் எக்ஸ் சமூக வலைதளத்தில் செயல்படும், எக்ஸ் ஏஐ நிறுவனத்தின் தயாரிப்பான க்ரோக் எனும் செய்யறிவு சாட்பாட் அம்சத்தில் அந்நாட்டு பயனர்கள், அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன், மறைந்த அவரது தாயார் மற்றும் முக்கிய தலைவர்கள் குறித்து சில கேள்விகளைக் கேட்டுள்ளனர்.
அந்தக் கேள்விகளுக்கு பதிலளித்த க்ரோக், அவர்கள் குறித்து அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அந்த செய்யறிவு, அந்நாட்டின் நவீனகால தந்தையாகக் கருதப்படும் முஸ்தஃபா கெமால் அடாடுர்க் என்பவரைப் பற்றியும் அவதூறு பதில்களை அளித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, சமூக ஒழுக்கத்தை சீர்கெடுக்கும் அச்சுறுத்தல் எனக் கூறி அந்த செய்யறிவு தொழில்நுட்பத்துக்கு துருக்கியின் இணைய சட்டத்தின் கீழ் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு அங்காரா நகர மக்கள் அந்நாட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், நேற்று (ஜூலை 9) அந்த மனுவை விசாரித்த அந்நாட்டு குற்றவியல் நீதிமன்றம், கோரிக்கையை அங்கீகரித்து, அந்த செய்யறிவு தொழிநுட்பத்துக்கு தடை விதிக்குமாறு துருக்கியின் தொலைத்தொடர்பு ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, க்ரோக் செய்யறிவு தொழில்நுட்பம் சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட பின்னர், அதனிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அரசியல் ரீதியான தவறான பதில்களைத் தருவது மிகப் பெரியளவில் சர்ச்சையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.