;
Athirady Tamil News

பின்லாந்து கல்விமுறைமையும் இலங்கை பெற்றுக் கொள்ள கூடிய முன்மாதிரிகளும்

0

சிவசாமி மனோகரன்,
ஓய்வு நிலை சிரேஷ்ட விரிவுரையாளர்,
தேசிய கல்வியியற் கல்லூரி.

உலகிலே கல்வியில் முன்னணி வகிக்கும் நாடான பின்லாந்து வடக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளதொரு கிழக்கு ஸ்கெண்டினேவிய நாடாகும். வுடக்கில் நோர்வே கிழக்கில் ரஷ்யா, மேற்கில் பொத்னியா வளைகுடா மற்றும் தெற்கில் பின்லாந்து வளைகுடா என்பன இதன் நாற்புற எல்லைகளாகும்.

இந்நாட்டின் மொத்த பரப்பளவு 338, 455 சதுர கிலோ மீற்றர்களாகும். மக்கள் தொகை 5.6 மில்லியனாகும். ஐரோப்பாவிலே அதிகளவான காடுகளைக் கொண்டுள்ள இந்நாட்டிலே 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட நிலப்பரப்பிலே காடுகள் காணப்படுகின்றன.

இயற்கை வனப்புமிக்க இந்நாட்டிலே அண்ணளவாக 188, 000 ஏரிகள் காணப்படுகின்றன. பின்லாந்தின் கடலோர சூழலை வளமாக்கும் வகையிலே 70, 000இற்கும் மேற்பட்ட தீவுகள் அமைந்துள்ளன. இந்த புவியியல் அம்சங்கள்பின்லாந்தின் இயற்கை வளங்களையும் சுற்றுப்பறச் சூழலையும் பிரதிபலிப்பதோடு நாட்டின் சுற்றுலா மற்றும் வாழ்வாதாரத்தற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.

உலகிலே சிறந்த கல்விமுறையைப் பின்பற்றும் நாடாகவும் மிகவும் மகிழ்ச்சிகரமான நாடாகவும் பின்லாந்து கருதப்படுகிறது. இதற்கான காரணங்களாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

கல்வி ஆரம்பம் மற்றும் கல்விக் கட்டமைப்பு:

பின்லாந்து நாட்டிலே பிள்ளளைகள் 7 வயதிலேயே தமது பாடசாலைக் கல்விக்குள் பிரவேசிக்கின்றனர். அதற்கு முன்னர் சுதந்திரமான கற்றல் சூழல் வழங்கப்படுகிறது. பாடசாலைகளிலே போட்டிகளற்ற கற்றற் சூழல் நிலவுகிறது.ஒத்துழைப்பும் ஊக்குவிப்பும் முறையாக வழங்கப்படுகின்றன.

சமத்துவமான கல்வி முறை:

பின்லாந்து கல்வி முறையில் அனைத்து மாணவர்களுக்கும் சமூகப்பின்னணி, பிராந்திய வேறுபாடு இல்லாமல் ஒரே தரமான கல்வி வழங்கப்படுகிறது. இது கல்வியில் சம உரிமையை வலியுறுத்துகிறது.

மாணவர்களின் சுயமான கற்றல்:

மாணவர்கள் தமது சொந்த கற்றல் நடவடிக்கைகளில் பங்கேற்று குழுக்களில் இணைந்து செயற்படுகிறார்கள். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையேயான நம்பிக்கையான தொடர்பு நிலவுகிறது.

செயற்பாடுகளின் போதுமாணவர்களது சுய மதிப்பீடு முக்கியத்துவம் பெறுகிறது.
குறைந்த அளவிலான பரீட்சைகள் மற்றும் அழுத்தம் இல்லாத கற்றல் சூழல்:
இங்கு பரீட்சைகள் குறைவாகவும் மாணவர்களைத் தரப்படுத்தல் முறைகள் தனிப்பட்ட முறையில் இடம்பெறுவதாலும் மாணவர்கள் எவ்விதமான அழுத்தங்களும் இன்றி கற்றுக் கொள்ளக் கூடிய சூழல் உள்ளது.

ஆசிரியர்களின் உயர்ந்த மதிப்பு:

பின்லாந்திலே ஆசிரியர் பணிக்கு மிகுந்த சமூகக் கௌரவம் வழங்கப்படுகிறது. சிறந்த ஆசிரிய மாணவர்களே ஆசிரியர் பயிற்சிக்கு தெரிவு செய்யப்படுகின்றனர். அரசு கல்விக் கொள்கைகளில் ஆசிரியர்களுக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது.

மகிழ்ச்சிகரமான பிள்ளைகள்:

ஐக்கிய நாட்டு தாபனத்தின் உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகள் பற்றிய அறிக்கையில் பின்லாந்து தொடர்ந்து முதலிடம் பெற்று வருகிறது. இங்கு பாடசாலைகளில் நிலவுகின்ற மகிழ்ச்சிகரமான சூழல் மாணவர்களின் ஆர்வத்தையும் கல்வி கற்கும் திறனையும் மேம்படுத்துகிறது.

உயர்ந்த வாழக்கைத் தரம் மற்றும் தொழில் வாய்ப்புக்கள்:

பின்லாந்து நாட்டிலே கல்வித் தரம் மட்டுமன்றி, வாழ்வாதாரமும் உயர்நிலையில் காணப்படுகிறது. பின்லாந்திலே கல்வி கற்பதற்கு சர்வதேச மாணவர்களிடையே போட்டி நிலவுகிறது. காரணம் தரமான கல்வியும் தொழிலுக்கான வழிகாட்டலும் தொழில் வாய்ப்புக்களும் தாராளமாக இங்கு கிடைக்கின்றன.

இதனால் பின்லாந்தின் கல்வி முறையானது உலகிலேயே சிறந்ததாகப்போற்றப்படுகிறது. ஏனெனில், சமத்துவம், மாணவர் மையமான கற்றல் சூழல், குறைந்த அழுத்தம், சிறந்த ஆசிரியர் மதிப்பு மற்றும் உயர்ந்த வாழ்க்கைத் தரம் ஆகியனவற்றை இந்நாட்டின் கல்வி முறையானது ஒருங்கிணைத்துள்ளது.

பின்லாந்து நாட்டின் கல்வி முறை ஏன் உலகின் சிறப்பான கல்விமுறையாக விளங்குகிறது. இதிலிருந்து இலங்கைப் பெற்றுக் கொள்ளக்கூடிய முன்மாதிரிகள்யாதென நாம் சிந்திப்பதனூடாக எமது நாட்டின் கல்வி முறைமையில் பொருத்தமான மாற்றங்களை விதந்துரைப்பதற்கு இது வழிகாட்டும்; என நான் எதிர்பார்க்கிறேன்.

பின்லாந்து நாட்டிலே கட்டாயக் கல்வி முறைமைக் காணப்படுவதோடு இது முழுமையாக இலவசமாக வழங்கப்படுகிறது. இங்கு 7 வயது தொடக்கம் 16 வயது வரை கல்வி கட்டாயமானதாகும்.

அதேவேளை, அரச பாடசாலைகளில் கல்வி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இங்கு தனியார் பாடசாலைகள் எதுவும் இல்லை. கல்வியானது முற்றுமுழுதாக அரச கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இலங்கையிலே இலவச கட்டாயக் கல்விமுறைமை ஒன்று காணப்பட்டாலும் கல்வி முறைமையானது படிப்படியாக அரச கட்டுப்பாட்டிலிருந்து நழுவிப் போகின்ற நிலைமைகளும் காணப்படுகின்றன.

அதேவேளை, தனியார் பாடசாலைகளின் ஆதிக்கம் மேலோங்கக் கூடிய நிலைமைகள் தோன்றியுள்ளன. எனவே, பின்லாந்து நாட்டிலே கல்விமுறைமையை நடைமுறைப்படுத்தும் விதத்தினை முன்மாதிரியாகக் கொண்டு இலங்கையிலும் கல்வியை வழங்கும் முழுப் பொறுப்பினையும் அரசு ஏற்றுக் கொண்டு செயற்படுமிடத்து இலங்கையின் கல்வி முறைமையில் படிப்படியான விருத்தியை எதிர்பார்க்கலாம்.

பின்லாந்திலே மாணவர்கள் மதிப்பீட்டுப் புள்ளிகள் அடிப்படையில், ஒருவருடன் ஒருவர் ஒப்பிடப்படுவதில்லை. ஒவ்வொரு மாணவரதும் தனித்திறமைகள் மற்றும் ஆர்வங்களை அடிப்படையாகக் கொண்டே கற்றல் முறைகள் அமைக்கப்படுகின்றன. திறன் விருத்தியை நோக்காகக் கொண்டே கணிப்பிடல் மற்றும் மதிப்பிடல் பணிகள் இடம்பெறுகின்றன.

போட்டிமுறையிலான பரீட்சை முறைமைகள் அங்கு இல்லை. எனவே, கல்வியில் சமத்துவம் மற்றும் சமூக நீதிபேணப்படுகிறது. இலங்கையின் தற்போதைய கல்வி முறைமையிலே போட்டி முறைமையிலான பரீட்சை முறைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. கல்வியிலே உள்ளீர்த்தல் தொடக்கம் வேலை வாய்ப்பு வரை போட்டித் தன்மையான மதிப்பிடலும் செயன்முறைகளுமே பின்பற்றப்படுகின்றன.

எனவே பின்லாந்து நாட்டின் கணிப்பிடல் மதிப்பிடல் முன்மாதிரிகளை இலங்கையின் கல்வி முறைமையில் பின்பற்றுமிடத்து கல்வியிலே நல்லதொரு மாற்றத்தை தோற்றுவிக்கலாம்.மேலும் பின்லாந்து நாட்டின் கல்வி முறைமையிலே மாணவர்கள் இடையிலே போட்டித்தன்மை நிலவுவதில்லை. இங்கே மாணவர்கள் குழுவாகவும் ஒத்துழைப்புடன் இணைந்தும் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடும் வகையிலேயே கற்றல் செயன்முறைகள் இடம்பெறுகின்றன.

கற்பித்தலை விட கற்றலுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் குழுவாகவும் இணைந்தும் கற்றல் செயன்முறைகள் ஈடுபடுவதனால் பல்வேறு சமூகத் திறன்கள் அவர்களிடையே விருத்தியடைகின்றன. மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்கப்படுவதில்லை.

இங்கு மாணவனது கற்றல் வேகத்துக்கு ஏற்ப கற்றல் சாத்தியமாக்கப்பட்டுள்ளது. இது மாணவனது தனியாள் திறனை விருத்தி செய்வதற்கு உதவுகிறது. சுதந்திரமான கற்றல் நிலைமைகள் காணப்படுவதனால் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பதற்கும் நன்றாக உறங்குவதற்கும் உடற்பயிற்சி செய்வதற்கும் சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.

இவை கல்வி விருத்திக்கான முக்கிய அம்சங்களாகக் கருதப்படுகின்றன. ஆனால், இலங்கையின் தற்போது நடைமுறையில் உள்ள கல்வி முறையிலே ஓய்வு நேரப் பயன்பாடு மற்றும் விளையாட்டு என்பனவற்றை பாடசாலைக் கலைத்திட்டத்திலே தேர்ச்சிகளாக்கி வழங்கி வருகிறோம்.

பிள்ளைகள் பாடசாலையிலும் வீடுகளிலும் தனியார் கல்வி நிறுவனங்களிலும் ஓய்வு ஒழிச்சலின்றி கல்விச் செயன்முறைகளிலே ஈடுபடுகின்றனர். போட்டித்தன்மையின் காரணமாக சுயநலப் போக்கும் ஏனையோருக்கு உதவுகின்ற மனப்பான்மை இன்மையும் மேலோங்கியுள்ளன.

எனவே பின்லாந்து கல்வ்p முறையிலே காணப்படுகின்ற சுதந்திரமான மற்றும் சுயாதீனமான நிலைமைகளையும் சுயவேகக் கற்றல் சந்தர்ப்பங்களையும் முன்மாதிரிகளாகக் கொண்டு கற்றல் கற்பித்தல் செயன்முறைகளை மாற்றியமைப்பதன் ஊடாக கல்விமுறைமையிலே விருத்திகளை எதிர்பார்க்கலாம்.

பின்லாந்து நாட்டின் பாடசாலை முறைமையின் முக்கிய அம்சங்களை நோக்குவோமானால் இங்கு அனைத்து பாடசாலைகளும் 100மூ ஆரசாங்கத்தின் கீழ் இயங்குகின்றன் எந்தவொரு தனியார் பாடசாலைகளும் அங்கு இல்லை. கல்வி முற்றுமுழுதாக இலவசமாக அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது.

பின்லாந்து பாடசாலைகளில் பரீட்சைகள் நடத்தப்படுவதில்லை. மாணவர்களை தரவரிசை அடிப்படையில் வேறுபடுத்துவது இல்லை. மாணவர்களது 13 வயது வரை எந்தப் பொதுப் பரீட்சைகளும் நடத்தப்படுவதில்லை. உயர்தரப் பரீட்சையின் இறுதியில் மட்டுமே விரும்பியோர் இறுதிப்பரீட்சை எழுதலாம்.

பிள்ளைகள் 7 வயதிலேயே பாடசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர். இதன் பின் முதல் மூன்று ஆண்டுகளில் கற்றலுக்கு அப்பால் விளையாட்டுஇ உளவியல் மற்றும் உடல் வளச்;சிக்கு அதிக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு பாடசாலையில் அதிக பட்சமாக 600 மாணவர்களே அனுமதிக்கப்படுகின்றனர்.

ஒரு வகுப்பறையில் 20 – 26 வரையான மாணவர்களே இருக்கின்றனர். வீட்டுப் பாடம் எதுவும் வழங்கப்படுவதில்லை. மாணவர்கள் தத்தமது விருப்பத்துக்கு ஏற்ப பாடங்களைக் கற்றுக் கொண்டால் போதுமானதாகக் கருதப்படுகிறது. 7 வயது தொடக்கம் 16 வயது வரை ஆரம்பக் கல்வி மற்றும் கனிஷ;ட இடைநிலைக் கல்வி கட்டாயமானதாக்கப்பட்டுள்ளது. இது முற்றுமுழுதாக இலவசமாக வழங்கப்படுகிறது.

10 வருட கட்டாயக் கல்வியின் பின்னர் மாணவர்கள் தமது விருப்பத்துக்கு ஏற்றவாறு தொழில் மற்றும் மேலதிக கல்வித் துறைகளைத் தெரிவு செய்து கொள்கின்றனர். முதுநிலைப் பட்டம் பெற்றர்கள் மட்டுமே ஆசிரியர்களாக உள்ளீர்க்கப்படுகின்றனர். இவர்களுக்கு மேலதிக கற்பித்தல் பயிற்சி வழங்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. மாணவர்களது ஆரோக்கியம் மற்றும் உடல்நலத்துக்காக மருத்துவ ஆலோசகர்களும் பாடசாலைகளில் உள்ளனர். பாடசாலை காலமும் குறைவானதாகும்.

மாணவர்கள் மன அழுத்தமின்றி கற்பதற்கான கற்றற் சூழல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பின்லாந்தின் பாடசாலை முறைமையானது மனித விருப்பத்தையும் திறன்களையும் முன்னிலைப்படுத்துகின்ற போட்டி முறைமைகளைத் தவிர்க்கின்ற சமமான கல்வி வாய்ப்புக்களை வழங்குகின்ற உலகின் மிகச் சிறந்த பாடசாலைகளாக விளங்குகின்றன.

பின்லாந்து நாட்டின் கல்வி முறைமையிலே ஒவ்வொரு பாடசாலையிலும் மருத்துவ மனையொன்று காணப்படுகிறது.இங்கு மாணவர்களது உடல்நிலை பராமரிப்பு கண்காணிக்கப்படும்.

ஆரோக்கியமான உடலிலேதான் ஆரோக்கியமான உளம் காணப்படும். என்பதற்கேற்ப சிறந்த கல்வியை ஒவ்வொருவரும் பெற்றுக் கொள்ள நல்ல உடல்நிலையும் உள நிலையும் பேணப்படுவதற்கு இது வகைசெய்கிறது. அவ்வாறே கற்றல் முறையானது சிக்கலற்றதாகவும் ஒருங்;கிணைந்ததாகவும் காணப்படுகிறத. இங்கு எல்லாப் பாடசாலைகளிலும் ஒரே தரத்திலான கல்வியே வழங்கப்படுகிறது.

இதனால் மாணவர்கள் ஒரு பாடசாலையிலிருந்து ஏதாவதொரு காரணத்தால் இன்னொரு பாடசாலைக்கு இடம் மாறினாலும் கல்வியிலே எவ்விதமான பாதிப்பும் ஏற்படுவதில்லை.

பின்லாந்து நாட்டின் கல்விச் செயன்முறையில் வகுப்பறைச் செயற்பாடுகள் மிகச் சிறப்பானவைகளாகவும் விசேடமானவைகளாகவும் அமைந்துள்ளன. இவை மாணவர்களின் தனிப்பட்ட வளர்ச்சியையும் குழு ஒருங்கிணைப்பையும் முன்னிலைப்படுத்துவதாகவும் காணப்படுகின்றன. பின்வரும் சிறப்பம்சங்கள் இந்நாட்டின் வகுப்பறைச் செயற்பாடுகளில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியனவாக உள்ளன.

• இணைந்து கற்றலும் குழுச்செயற்பாடுகளும் :

வகுப்பறைச் செயற்பாடுகளின் போது மாணவர்களிடையே போட்டித் தன்மை நிலவுவதில்லை. மாணவர்கள் குழுவேலைகளில் ஈடுபடுவதோடு இச்சந்தர்ப்பங்களில் இணைந்து கற்பதற்கும் ஒத்துழைத்துச் செயலாற்றுவதற்கும் வழிகாட்டப்படுகின்றனர். இதனூடாக சமூக உணர்ச்சித்திறன்களை விருத்தி செய்வதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

• சுயவேகக் கற்றல் :

இங்கு வகுப்பறைச் செயற்பாடுகளின் போதுமாணவர்கள் தமது சொந்த வேகத்தில் கற்றுக் கொள்வதற்கான வாய்பு;புக்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இதன் காரணமாக அவர்களது கற்றல் ஆர்வம் அதிகரிப்பதோடு தமது கற்றல் திறன்களை விருத்தி செய்து கொள்வதற்கும் சந்தர்ப்பங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. மாணவர்கள் சுயமாகவும் தமது தேவைகளுக்கு ஏற்றவாறும் கற்றலை மேற்கொள்வதற்கும் இங்கு சந்தர்ப்பங்கள் உள்ளன.

• வகுப்பறை மாணவர் தொகை மற்றும் சூழல் :

இங்குள்ள பாடசாலைகளில் வகுப்பறைகளிலே சராசரியாக 20 – 26 மாணவர்களைக் கொண்ட வகுப்பறை அமைப்பே காணப்படுகிறது. இவ்வாறான சிறிய எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்டுள்ள வகுப்பறை அமைவின் காரணமாக ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவர் மீதும் தனிப்பட்ட கவனத்தைச் செலுத்துவதற்கும் உதவுகிறது. மாணவர்கள் வெறுங்கால்களுடன் வகுப்பறைக் கருமங்களில் ஈடுபடுவது இங்கு விசேடமான அம்சமாகக் காணப்படுகிறது.

• கற்றலுக்கான நேரம் மற்றும் இடைவேளைகள் :

பாடசாலை நேரம் 9.00 – 930 மணி தொடக்கம் பிற்பகல் 2.00 – 2.45 மணிக்குள் நிறைவடைகிறது. ஒரு நாளையில 4 அல்லது 5 பாடவேளைகளே இடம்பெறுகின்றன. போதிய அளவில் இடைவேளைகள் வழங்கப்படுகிறது. மாணவர்கள் உடல் மற்றும் மன அழுத்தங்களின்றி கற்றல் செயன்முறைகளில் ஈடுபடுவதற்கு இது வழிவகுக்கிறது.

கலைத்திட்ட அமைப்பு :

வகுப்பறைச் செயற்பாடுகளின் போது மதிப்பீடு குறைந்த அளவிலேயே இடம்பெறுகிறது. இவை மாணவர்களின் திறன்களை மதிப்பிடுவதோடு ஓருவரை ஒருவர் ஒப்பீடு செய்வது இல்லை. மதிப்பீட்டு முடிவுகளை ஆசிரியர்கள் மட்டுமே அறிந்திருப்பர். இதனால் மாணவர்கள் வேறுபாடுகளற்ற சமத்துவ நிலையில் நோக்கப்படுகின்றனர்.

இது ஒத்துழைத்து கற்றல் சந்தர்ப்பங்களை ஏற்படுத்துவதோடு சமூகத் திறன்களை விருத்தி செய்வதற்கும் வழிவகுக்கிறது. பின்லாந்து நாட்டின் கல்வி முறைமையிலே ஆசிரியர்கள் மிக முக்கிய பங்கு வகிப்பவர்களாக உள்ளனர். இங்குள்ள ஆசிரியர்கள் உளவியல் மற்றும் வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் தொடர்பில் சிறப்புப் பயிற்சி பெற்றவர்களாகவும் முதுநிலைப் பட்டம் பெற்றவர்களாகவும் உள்ளனர்.

பாடத்திட்டக் கட்டமைப்புக்குள் மதிப்பீடுகளை அமைக்கும் சுதந்திரம் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் மாணவர்களது கற்றல் விருத்தியை தொடர்ச்சியாகக் கணிப்பிட்டு வழிநடத்துகின்றனர். இந்த கணிப்பீடுகள் மாணவர்கள் பற்றிய விளக்கத்ததை ஆசிரியர்கள் அறிந்து கற்றல் கற்பித்தலைமாற்றியமைப்பதற்கே பயன்படுத்தப்படுகிறது.

இதனால் மாணவர்கள் மன அழுத்தமின்றி மகிழ்வுடன் இதில் பங்கு கொள்கின்றனர். இங்கு சுய கணிப்பீடு மற்றும் சகபாடிக் கணிப்பீடு என்பன முக்கியம் பெற்றுள்ளன. மாணவர்களின்; திறன்கள மட்டுமே மதிப்பிடப்படுவதோடு உயர்ந்த தொழில்நுட்பம் சார்ந்த கணிப்பீட்டுக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. மாணவர்கள் பாதுகாப்பாகவும் பயமின்றியும்மதிப்பீடுகளை எதிர்கொள்கின்றனர்.

இது சிறந்த கற்றல் சூழலொன்றை உருவாக்குகிறது.இவ்வாறே இங்கு திறந்த கல்வி விருப்பங்கள் முக்கியமானதொரு விடயமாக உள்ளது. இங்கு மாணவர்கள் 10 ஆண்டு கால கட்டாயக் கல்வியின் பின் தமது ஆர்வம் மற்றும் திறனை பொறுத்து உயர்கல்வியை அல்லது தொழிற்றுறைக் கல்வியை தேர்வு செய்யக் கூடியதாக உள்ளது.

இதனாலபின்லாந்து நாட்டின் கல்விக் கொள்கையானது காலத்திற்கு ஏற்றவகையிலான மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டுள்ளதோடு கல்வியானது சமூக நல்வாழ்வுக்கான திறவு கோலாகக் கருதப்படுகிறது.இத்தகைய சிறப்பம்சங்களின் காரணங்களாலேயே பின்லாந்து நாட்டின் கல்வி முறையானது உலகின் மிகச் சிறந்த கலவி முறையாகப் போற்றப்படுகிறது. இத்தகைய சிறந்த வழிமுறைகளை இலங்கையின் கல்வி முறையிலும் படிப்படியாக ஏற்படுத்துவோமாயின் கல்விக்கூடாக சிறந்ததொரு எதிர்காலத்தைக் கட்டியெழுப்பக் கூடியதாக இருக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.