;
Athirady Tamil News

ஆன்லைன் பரிவர்த்தனை தோல்வி… ரூ.20-க்காக ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் வாட்ச் – சமோசா வியாபாரி அடாவடி

0

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் ரெயில் நிலையத்தில் ஆன்லைன் பரிவர்த்தனை தோல்வியடைந்ததால் வாடிக்கையாளரை சட்டையை பிடித்து ரூ.20 சமோசாவுக்காக, ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் வாட்சை சமோசா வியாபாரி ஒருவர் வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நேற்று முன்தினம் ஜபல்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள 5-வது நடைமேடையில் சமோசா விற்றுக் கொண்டிருந்த வியாபாரியிடம், பயணி ஒருவர் ரூ.20-க்கு சமோசா வாங்கினார். அவர் ஆன்லைன் மூலம் பணம் செலுத்த முயன்றார். ஆனால் நெட்வொர்க் பிரச்சனை காரணமாக அவரால் பணத்தை செலுத்த முடியவில்லை. அந்த நேரத்தில் அவர் வந்த ரெயில் புறப்படத் தொடங்கியது.

உடனடியாக கியூஆர் கோடை புகைப்படம் எடுத்துக் கொண்ட பயணி, பின்னர் பணம் செலுத்துவதாக சமோசா வியாபாரியிடம் தெரிவித்துள்ளார். கோபமடைந்த வியாபாரி, பயணியின் சட்டையை பிடித்துக் கொண்டு பணம் செலுத்திவிட்டு தான் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அந்த பயணி மீண்டும் பணம் செலுத்த முயன்றார். ஆனால் ஆன்லைன் பரிவர்த்தனை செய்ய முடியவில்லை. சமோசா வியாபாரி விடுவதாக தெரியவில்லை.

இதையடுத்து வேறுவழியின்றி அந்த பயணி தன்னுடைய ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் வாட்சை கழற்றி வியாபாரியிடம் கொடுத்துவிட்டு சென்றுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து ஜபல்பூர் பிரிவு ரெயில்வே மேலாளர் சம்பந்தப்பட்ட வியாபாரியின் உரிமத்தை ரத்து செய்துள்ளார். மேலும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

2023-24 மற்றும் 2024-25 நிதியாண்டுகளில் ரெயில்வேயில் 61 லட்சத்துக்கும் அதிகமான புகார்கள் பதிவாகியுள்ளன. ரெயில் சேவைகள் தொடர்பான புகார்கள் 18 சதவீதம் அதிகரித்தாலும், ரெயில் நிலையங்கள் தொடர்பான புகார்கள் 21 சதவீதம் குறைந்துள்ளன.

ரெயில்களில் பயணிகளுக்கு பாதுகாப்பு என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. ரெயில்களில் பாதுகாப்பு தொடர்பான புகார்கள் 2023-24ம் ஆண்டில் 4.57 லட்சமாக இருந்த நிலையில், 2024-25ம் ஆண்டில் 7.50 லட்சமாக 64 சதவீதம் அதிகரித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.