தீவகத்துக்கான எரிபொருள் விநியோகத்தில் – கோட்டா பத்திர முறைமையில் விசேட கவனம்
தீவகத்துக்கான எரிபொருள் விநியோகத்தில் கோட்டா பத்திர முறைமையில் விசேட கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.சிவகரன் தெரிவித்தார்.
யாழ் மாவட்டத்தில் உள்ள எரிபொருள் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் நோக்கில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு அவர் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை. அதற்காக மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் தலைமையின் கீழ் பல்வேறுபட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.இந் நிலையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினர் தங்கள் சேவைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன் இந்த கலந்துரையாடலில் எரிபொருள் விநியோகத்தின்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஏற்படும் நெருக்கடியின் போதான முரண்பாடுகளை தடுப்பது தொடர்பாகவும் பேசப்பட்டதெனவும் மேலதிக அரசாங்க அதிபர் க.சிவகரன் தெரிவித்தார்.
இக்கந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடபிராந்திய முகாமையாளர் சிவகரன், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், பிரதேச செயலாளர்கள், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.