டெல்லி குண்டு வெடிப்பு! புல்வாமா தாக்குதல் அமைப்புடன் பெண் மருத்துவருக்கு தொடர்பா?
டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட லக்னௌவை சேர்ந்த பெண் மருத்துவர் சாஹின் சயீத், புல்வாமா தாக்குதலுக்கு திட்டமிட்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட உமர் ஃபரூக்கின் மனைவி அஃபிராஹ் பீபி, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பில் ஜமாத்-உல்-மொமினாத் என்ற பெண்கள் படைப்பிரிவில் முக்கிய பொறுப்பில் சேர்ந்தார். தொடர்ந்து, சமீபத்தில்தான் படைப்பிரிவின் ஆலோசனைக் குழுவிலும் இணைந்துள்ளார். மேலும், உமர் ஃபருக்கின் சகோதரியான சாதியா அசாரும் பீபியும் ஒன்றாக இணைந்துதான் பணியாற்றி வந்துள்ளனர்.
இந்த நிலையில்தான், இவர்கள் இருவருடன் சாஹின் சயீத்துக்கு தொடர்பு ஏற்பட்டதாகவும், தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
2006-ல் பட்டப்படிப்பை முடித்த சாஹின் சயீத், ஹயாத் ஜாபர் என்ற மருத்துவரை மணந்தார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடுகள் காரணமாக, 2012-ல் இருவரும் பிரிந்து விட்டனர்.
2012 முதல் 2013 வரையில் கான்பூரில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் மருந்தியல் துறையின் தலைவராக இருந்த சாஹின் சயீத், 2016 முதல் 2018 வரையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்துள்ளார்.
தொடர்ந்து, ஃபரிதாபாதில் அல்-ஃபலா பல்கலைக் கழகத்தில் மூத்த மருத்துவராகப் பணிபுரிந்த நிலையில்தான், பயங்கரவாத செயலில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜமாத்-உல்-மொமினாத் பெண்கள் பிரிவுக்கு, இந்தியாவில் ஆள் சேர்ப்பு மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளில் பெண்களை ஈடுபடுத்தியதற்காகவும் சாஹின் சயீத் கைது செய்யப்பட்டார்.