மாவட்ட உணவுப் பாதுகாப்பு குழுக் கூட்டம்
யாழ்ப்பாண மாவட்ட உணவுப் பாதுகாப்பு குழுக் கூட்டம் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் வடக்கு மாகாண விவசாயம் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளரும் மாவட்ட உணவுப் பாதுகாப்பு குழு இணைத்தலைவருமான எஸ். சிவசிறீ ஆகியோரின் இணைத் தலைமையிலும் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்றைய தினம் (13.12.2025) நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் நிரந்தர உப குழுக்களாக திட்டமிடல் குழு, உணவுப் பாதுகாப்பு குழு மற்றும் விலைநிர்ணய குழு ஆகிய குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அந்தவகையில் சுற்றுநிருபத்தின் பிரகாரம் அரசாங்க அதிபர் மற்றும் அந்தந்த மாகாணங்களின் விவசாய அமைச்சின் செயலாளர் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதான தொழிலாக விவசாயம், கால்நடை உற்பத்தி மற்றும் மீன்பிடி ஆகியன காணப்படுவதாகவும் தெரிவித்ததார். மேலும், அதனடிப்படையில் உணவுப்பாதுகாப்பு குழுவின் நோக்கங்களாக மாவட்டத்திலுள்ள மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, உணவு உற்பத்திகளை விநியோகித்தலை உறுதிப்படுத்தல், சந்தைப்படுத்தல், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அணுகல் வசதிகளை விருத்தி செய்தல், சுத்தமான தண்ணீரை வழங்கல், சுகாதாரம், போசாக்கான உணவு மற்றும் ஊட்டச்சத்து உணவுகளுக்கான அணுகல் மற்றும் போஷாக்கு கல்வியை உறுதி செய்தல், காலநிலை மாற்றம், அனர்த்தங்கள்,பொருளாதார நெருக்கடிகளின் போது உணவு உற்பத்தி நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் திட்டங்களை தயாரித்தல்,செயற்படுத்தல் மற்றும் மேற்பார்வை செய்வதற்கான நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு வரையறை தெளிவாக காட்டப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும், இதன்மூலம் ஒருவரின் போஷாக்கான, பாதுகாப்பான நச்சற்ற உணவு கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்காக இக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் இக்குழுவிலுள்ள அனைவரும் ஒருங்கிணைந்து செயற்படல் மூலம் எமது மாவட்டத்தின் உணவுப்பாதுகாப்பை உறுதி செய்ய முடியுமென இணைத்தலைமை உரையில் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
மேலும் இக் கூட்டத்தில் கருத்துதெரிவித்த வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் எஸ். சிவசிறீ , யாழ்ப்பாண மாவட்டத்தில் விவசாயம், கால்நடை மற்றும் மீன்பிடித் தொழில் ஆகியவை மிக முக்கியமான பொருளாதார நடவடிக்கைகளாக காணப்படுகிறது. அந்த வகையில் இம் மூன்று பொருளாதார நடவடிக்கைகளையும் வெற்றிகரமாக முன்னெடுக்கும் போது உணவுப்பாதுகாப்பை உறுதி செய்ய முடியுமென தெரிவித்தார். மேலும் உணவுப்பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உணவு உற்பத்தி தரவுகள் மிக அவசியமாவதாகவும் அவற்றை சேகரித்து நிரைப்படுத்தல் அவசியமானதென தெரிவித்தார். எனினும் இவ் தரவு சேகரிப்பு நடவடிக்கைக்காக தேவையான நிதி ஒதுக்கீடுகளை பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை இருப்பதாகவும் இந் நடவடிக்கைகளை அடுத்த வருடத்தில் மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்ததுடன் இந் நடவடிக்கைகளுக்காக அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
உணவுப் பாதுகாப்பு குழுக் கூட்டத்தினைத் தொடர்ந்து விவசாய குழுக் கூட்டம் நடைபெற்றது இக் கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டதுடன், அரசாங்க அதிபரினால் பின்வரும் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.
1.விவசாய உணவு உற்பத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டபோது, யாழ்ப்பாண மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 13,765 ஹெக்டயர் காணிகளில் 12,580 ஹெக்டயர் நிலப்பரப்புக்கள் விவசாய செய்கையை மேற்கொள்ளக் கூடிய வகையில் உள்ளமையினால் இந்த காணிகளில் சிறுதானிய செய்கையை மேற்கொள்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதுடன், இவ்வாறு சிறுதானிய செய்கையினை மேற்கொள்வதில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன், கால்நடை மற்றும் இயற்கையை காரணம் காட்டி செய்கை மேற்கொள்வதை நிறுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. குறிப்பாக யாழ் மாவட்டத்தில் வேலணை மற்றும் ஊர்காவற்துறை போன்ற பிரதேச செயலக பிரிவுகளில் காட்டு மாடுகள் அதிகம் விளை நிலங்களை அளிப்பதாகவும், சண்டிலிப்பாய், கரவெட்டி, தென்மராட்சி போன்ற பிரதேச செயலக பிரிவுகளில் கட்டாக்காலி மாடுகளின் விளைநிலங்களை அழிப்பதாகவும் விவசாயிகளால் விசனம் தெரிவிக்கப்பட்டு அது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
2.உரிய அனுமதிப் பத்திரம் இல்லாமல் ஒரு மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டத்திற்கு மாடுகள் கொண்டு செல்லப்படுவதை முற்றாக நிறுத்த வேண்டும் என்றும் இதற்கு உரிய மாவட்ட செயலாளர் ஊடாக அந்தந்த பிரதேச செயலாளர்களுக்கு அறிவித்தல் வழங்கி திட்டத்தை இறுக்கமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வளர்ப்பு மாடுகளுக்கு இலக்கத் தகடுகள் கட்டாயம் குத்தப்பட்டு இருக்க வேண்டும் என்றும், கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உரிய அதிகாரிகளுக்கு அரசாங்க அதிபரினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
3 இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கபபட்ட விவசாயிகளுக்கு காப்புறுதி திட்டம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், யாழ் மாவட்டத்திற்கென்று விசேட காப்புறுதி நிபந்தனைகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் தீர்மானம் மேற்கொள்ளப்படது. மேலும் சம்பந்தப்பட்ட கமநல அபிவிருத்தி திணைக்களங்களையும் விவசாயிகளையும் அழைத்து இது தொடர்பான கலந்துரையாடலை மேற்கொள்ளுமாறு அரசாங்க அதிபரினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
4.விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது விவசாயிகள் காலநிலை கருத்தில் கொண்டு விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி திட்டமிட்டலை மேற்கொள்ள வேண்டும் என்றும் , சந்தைகளில் பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள கடைகளின் ஒப்பந்தங்களை இரத்து செய்து வியாபாரிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டதுடன் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் உற்பத்தி பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பாகவும், யாழ் மாவட்டத்தில் காணப்படும் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. மேலும்,
பயன்படுத்தப்படாத காணிகளை எவ்வாறு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் அதனை வேறு எந்த விவசாய உற்பத்திக்கு பயன்படுத்தலாம் என்ற அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், பாதீனிய கட்டுப்பாடு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் , உரமானியம் வழங்கல் தொடர்பாகவும், விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்யப்படும் உற்பத்தி பொருட்களுக்கு சந்தையாளர்களினால் கழிக்கப்படும் பொருட்கழிவு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
5.யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 9000 லீட்டர் பால் நுகர்ச்சிக்கு தேவைப்படுவதாகவும் இதில் சுமார் 6000 லீட்டர் பால் யாழ் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டு நேரடியாக நுகரப்படுவதாகவும் ஏனைய பால் வெளி மாவட்டங்களில் இருந்து பதனிடப்பட்டு கொண்டுவரப்பட்டு, நுகரப்படுவதாகவும், யாழ் மாவட்டத்தில் பால் பதனிடும் நிலையங்களை நிறுவதற்கு நடடிவ்கை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
6.இதேவேளை கடலுணவு உற்பத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டபோது யாழ் மாவட்டத்தில் இருந்து ஏற்றுமதிக்காக வழங்கப்படும் கடலுணவுகள் எந்த அடிப்படையில் பதிவு செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பது தொடர்பாகவும், கடலுணவு உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதோடு. யாழ் மாவட்டத்தில் முட்டை உற்பத்தி ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் குறைவாக காணப்படுவதாகவும் இதற்கு செலவிற்கு தக்க வருமானம் காணப்படாமையே காரணம் என்றும் கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட விவசாய பணிப்பாளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர், மாவட்ட த்தில் பிரதேச செயலாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலக பிரத்தியேக இணைப்பாளர், மாகாண விவசாயம், மீன்பிடி மற்றும் கால்நடை உற்பத்தி துறைசார்ந்த திணைக்கள தலைவர்கள், விவசாய சம்மேளன பிரதிநிதிகள், மாவட்ட செயலக, பிரதேச செயலக விவசாய துறைசார்ந்த உத்தியோகத்தர்கள், உள்ளிட்ட துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
