;
Athirady Tamil News

யாழ்ப்பாண மாவட்டத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டிற்கான தந்திரோபாய சுற்றுச்சூழல் மதிப்பீடு (SEA) தொடர்பான பங்குதாரர்களுடனான கூட்டம்

0

யாழ்ப்பாண மாவட்டத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டிற்கான தந்திரோபாய சுற்றுச்சூழல் மதிப்பீடு (SEA) தொடர்பாக பங்குதார்களுடனான கலந்துரையாடல் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (24.04.2026) காலை 09.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர், இலங்கையின் வட மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேம்பாட்டிற்கு ஆதரவளிக்கும் வகையில், இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகார சபை (SLSEA) ஒரு உத்திசார் சுற்றுச்சூழல் மதிப்பீட்டை (SEA) தொடங்கியுள்ளது எனவும், அதற்கு அமைவாக யாழ்ப்பாண மாவட்டத்தில்இன்றைய கூட்டம் நடைபெறுவதாகவும், இதன் முக்கிய முன்னெடுப்பானது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேம்பாட்டைத் துரிதப்படுத்துவதையும், தந்திரோபாய திட்டமிடலை வலுப்படுத்துவதையும், நாட்டின் ஆற்றல் மாற்றத்தில் தனியார் துறை முதலீடுகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும் தெரிவித்தார். அந்த வகையில் நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்றுறை, சங்கானை, பருத்தித்துறை, மருதங்கேணி ஆகிய பிரதேசங்களில் சாத்தியப்பாட்டு மதிப்பீடுகள் முதற்கட்டமாக மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஏனைய பிரதேச செயலகங்களிலும் ஆய்வுகளை மேற்கொள்ளுமாறும், கடல்கடந்த தீவுகளான நெடுந்தீவு, அனலைதீவு, எழுவைதீவு, நயினாதீவு ஆகியவற்றுக்கான சீரான மின் விநியோகம் தொடர்பாகவும், அத் தீவுகளில் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளதாகவும் (RO Plant), மின்சாரம் தடைப்படும் போது நீர் விநியோகம் தடைப்படுவதாகவும், ஆதலால் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் கேட்டுக் கொண்டார்.
மேலும், வீடுகளின் கூரைகளில் சூரிய கலன்களை (Solar Plant) பொருத்தி மின்சார உற்பத்தி செய்வதற்கான விண்ணப்பங்கள் இலங்கை மின்சார சபைக்கு அனுப்பிவைக்கப்பட்டும், மின்மாற்றி (Transformer) இயலளவு போதாமை காரணமாக இணைப்பு வழங்கப்படாமல் உள்ளதாகவும், இது தொடர்பிலும் கவனம் செலுத்துமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார்.

சூரிய ஒளி, காற்றாலை மற்றும் கடல் அலை மூலமாக மின் வலுவினை உற்பத்தி செய்யக்கூடிய பொருத்தமான இடங்களையும் சாத்தியமான சூழல்களையும் ஆய்வு செய்து மேற்கொள்வது தொடர்பாக முன்னேற்பாடக பங்குதாரர்களுடான கலந்துரையாடலாக இக் கலந்துரையாடல் அமைந்திருந்தது.

தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆய்வு, ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது. இது நிலையான அபிவிருத்தி மற்றும் ஆற்றல் மாற்றத்திற்கான அதன் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. அதற்கமைவாக ஆலோசனைச் சேவைகள், ஜப்பானைச் சேர்ந்த ஓரியண்டல் கன்சல்டன்ட்ஸ் குளோபல் கோ.லிமிடெட் (OCG) நிறுவனத்திற்கும், இலங்கையைச் சேர்ந்த கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் அண்ட் ஆர்க்கிடெக்ட்ஸ் அசோசியேட்டட் (பிரைவேட்) லிமிடெட் (CEAA) நிறுவனத்திற்கும் இணைந்து வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இக் கலந்துரையாடலில் இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகார சபையின் (SLSEA) ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குனர் பொறியியலாளர் சதுர வன்னியாராச்சி, உதவி இயக்குநர் பாலித அபயரத்ன, மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ். சிவகுமாரன், ஜப்பானைச் சேர்ந்த ஓரியண்டல் கன்சல்டன்ட்ஸ் குளோபல் கோ. லிமிடெட் (OCG) நிறுவனத்தினைச் சேர்ந்த ஆலோசகர்கள் ,உதவி பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.