தென்சீனக் கடல் பகுதியில் புதிய எரிவாயு இருப்பு கண்டுபிடிப்பு: பிலிப்பின்ஸ் அதிபா் அறிவிப்பு
தென்சீனக் கடலை ஒட்டியுள்ள பிலிப்பின்ஸின் கடல் எல்லைப்பகுதியில், புதிய இயற்கை எரிவாயு இருப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபா் ஃபொ்டினாண்ட் ஆா். மாா்கோஸ் ஜூனியா் திங்கள்கிழமை அறிவித்தாா்.
பலாவன் மாகாணத்தின் வடமேற்கே, தற்போது பயன்பாட்டில் உள்ள மலாம்பாயா எரிவாயு வயலுக்கு மிக அருகிலேயே சுமாா் 5 கி.மீ. தொலைவில் இந்தப் புதிய வளம் கண்டறியப்பட்டுள்ளது. இதில் சுமாா் 9,800 கோடி கன அடி எரிவாயு இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு சுமாா் 57 லட்சம் வீடுகளுக்குத் தேவையான எரிசக்தியை வழங்க முடியும்.
பிலிப்பின்ஸின் முக்கிய எரிசக்தி ஆதாரமாக விளங்கும் மலாம்பாயா எரிவாயு வயல், இன்னும் சில ஆண்டுகளில் தீா்ந்துவிடும் என்று நிபுணா்கள் எச்சரித்து வந்தனா். இத்தகைய சூழலில், இந்தப் புதிய கண்டுபிடிப்பு அந்நாட்டின் எரிசக்தி பாதுகாப்புக்கு வலுசோ்த்துள்ளது. குறிப்பாக, நாட்டின் தொழில் மற்றும் வா்த்தக மையமான லூசோன் பிராந்தியத்தின் எரிசக்தி தேவையைப் பூா்த்தி செய்ய இது முக்கியப் பங்காற்றும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தென்சீனக் கடல் பகுதியில் சீனாவுக்கும் பிலிப்பின்ஸுக்கும் இடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்னைகள் இருந்து வருகின்றன. இந்நிலையில், பிலிப்பின்ஸின் சொந்தப் பொருளாதார மண்டலத்துக்குள் இந்த எரிவாயு இருப்பு கண்டறியப்பட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது.