அமைதிக்கான நோபல் மறுப்பு ; ட்ரம்ப் கூறும் அதிர்ச்சி காரணம்
கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுடன் இணைக்கும் தனது முயற்சிக்கும், தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படாததற்கும் தொடர்பு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
இதனால் ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தகப்போர் மீண்டும் தீவிரமடையும் சூழல் உருவாகியுள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு தமக்கு வழங்கப்படும் என்று ட்ரம்ப் பெரிதும் எதிர்பார்த்தார்.
ஆனால், அந்தப் பரிசு வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டது. இது குறித்து நோர்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோருக்கு டிரம்ப் அனுப்பிய குறுஞ்செய்தியில், “எட்டுக்கும் மேற்பட்ட போர்களை நிறுத்திய பிறகும் உங்கள் நாடு எனக்கு நோபல் பரிசு வழங்கவில்லை.
எனவே இனி ‘அமைதி’ பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இப்போது அமெரிக்காவின் நலனுக்கு எது சரியானதோ அதைப்பற்றி மட்டுமே சிந்திப்பேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
டென்மார்க் நாட்டின் சுயாட்சி அதிகாரத்திற்குட்பட்ட கிரீன்லாந்து தீவை அமெரிக்கா விலைக்கு வாங்க ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கு டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில்,கிரீன்லாந்தின் நுக் (Nuuk) நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன் மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கிரீன்லாந்தை விற்க சம்மதிக்காவிட்டால், பெப்ரவரி 1ஆம் திகதி முதல் டென்மார்க், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட 8 ஐரோப்பிய நாடுகள் மீது 10% கூடுதல் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இது ஜூன் மாதம் முதல் 25% ஆக உயர்த்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ட்ரம்பின் இந்த மிரட்டலுக்கு ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. “2026-இல் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
நாம் பொருட்களையும் வணிகத்தையும் பரிமாறிக்கொள்ளலாமே தவிர, மக்களை வியாபாரம் செய்ய முடியாது” என்று டென்மார்க் வெளியுறவுத்துறை அமைச்சர் லார்ஸ் லோக் ராஸ்முசென் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்த வரி அச்சுறுத்தலை எதிர்கொள்ள வியாழக்கிழமை அன்று அவசர உச்சி மாநாட்டை ஐரோப்பிய ஒன்றியம் கூட்டுகிறது. ட்ரம்பின் வர்த்தகப் போருக்குப் பதிலடியாக 93 பில்லியன் யூரோ மதிப்பிலான அமெரிக்க இறக்குமதிகள் மீது வரி விதிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இதேவேளை, யுக்ரைன் போர் மற்றும் பாதுகாப்புச் செலவுகள் தொடர்பாக ஏற்கனவே நேட்டோ (NATO) அமைப்பில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது ஒரு நேட்டோ உறுப்பு நாடான டென்மார்க்கின் நிலப்பகுதியை மற்றொரு உறுப்பு நாடான அமெரிக்கா பலவந்தமாக உரிமை கோருவது உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.