;
Athirady Tamil News

தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு; வெளியான மகிழ்ச்சி்த் தகவல்

0

ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் 3,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய குறைந்தபட்ச சம்பளம் 27,000 ரூபாவிலிருந்து 30,000 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டு தொழில் ஆணையாளர் நாயகம் எச். எம். டி. என். கே. வத்தலியத்த,

சம்பள அதிகரிப்பு
2025 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச சம்பள திருத்தச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய இந்தச் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்திருத்தச் சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தும் போது, இடைத்தரகர் அல்லது ஒப்பந்தக்காரர் மூலம் ஏதேனும் கைத்தொழில் அல்லது சேவையில் ஈடுபடுத்தப்படும் ஊழியர் தொடர்பில், அண்மைய தொழில் வழங்குநர் மற்றும் இறுதித் தொழில் வழங்குநர் உட்பட அனைத்துத் தொழில் வழங்குநர்களும் அச்சட்டத்தின் விதிகளுக்குக் கட்டுப்பட்டுள்ளதாகத் தொழில் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திருத்தச் சட்டத்தின் 4 ஆவது பிரிவின் படி, வரவு செலவுத்திட்ட நிவாரணக் கொடுப்பனவுகளைச் சேர்ப்பதைத் தவிர, ஊழியர் ஒருவரால் 2025.03.31 ஆம் திகதியாகும் போது பெற்றுக்கொண்டிருந்த வேறு எந்தக் கொடுப்பனவையும் குறைந்தபட்ச சம்பளத்திற்காக ஈடுசெய்ய பயன்படுத்தக்கூடாது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பள அதிகரிப்பிற்கு அமைய ஊழியர் சேமலாப நிதியம் (EPF), ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF), மேலதிக நேரம் (Overtime), பணிக்கொடை (Gratuity), மகப்பேற்று நன்மைகள் மற்றும் விடுமுறைத் தினக் கொடுப்பனவுகள் உள்ளிட்ட அனைத்துச் சட்டப்பூர்வ கொடுப்பனவுகளுக்கும் இதனைப் பிரயோகிக்கும் பொறுப்பு தொழில் வழங்குநர்களுக்கு உரித்தாகும்.

ஏதேனும் ஒரு வகையில், உரிய முறையில் கொடுப்பனவுகளை மேற்கொள்ளாத தொழில் வழங்குநர்கள் இருப்பின், அது தொடர்பான முறைப்பாடுகளை cms.labourdept.gov.lk ஊடாக தொழில் திணைக்களத்தின் முறைப்பாட்டு முகாமைத்துவக் கட்டமைப்பில் பதிவிடலாம் அல்லது அருகில் உள்ள தொழில் அலுவலகத்தில் எழுத்துமூலம் சமர்ப்பிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.