;
Athirady Tamil News

வாஷிங்டன் போஸ்ட் ஊழியர்கள் பணிநீக்கம்: தலைமைச் செயல் அதிகாரியும் ராஜிநாமா!

0

அமெரிக்காவின் முன்னணி நாளிதழான வாஷிங்டன் போஸ்ட்டில் பணியாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டதன் எதிரொலியாக தலைமைச் செயல் அதிகாரி வில் லூயிஸும் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

அமெரிக்காவின் பிரபல நாளிதழான வாஷிங்டன் போஸ்ட்டில் கடுமையான நிதி நெருக்கடி காரணமாக தனது விளையாட்டு, புத்தக விமர்சனப் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றும் மூன்றில் ஒரு பங்கு அதாவது 300-க்கும் மேற்பட்ட பணியாளர்களை கடந்த வியாழக்கிழமை திடீரென பணிநீக்கம் செய்தது. மேலும், ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் பல இடங்களில் தனது கிளைகளையும் மூடியது.

இந்த சம்பவம் உலகளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வாஷிங்டன் போஸ்ட் தலைமைச் செயல் அதிகாரி வில் லூயிஸும் தனது பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பல்வேறு சர்ச்சைகளையும், வருவாய் இழப்பையும் சந்தித்து வந்த நிலையில், ஊழியர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அவர் வெளியேறியுள்ளதை அடுத்து, அந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ஜெஃப் டோனோஃப்ரியோ இடைக்காலத் தலைமைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ளார்.

பிரிட்டனில் பிறந்த வில் லூயிஸ் (56) 2024 ஆம் ஆண்டு ஜனவரியில் தி வாஷிங்டன் போஸ்டின் வெளியீட்டாளராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் உயர் நிர்வாகியாகப் பணியாற்றியிருந்தார்.

இதுகுறித்து வில் லூயிஸ் தனது ராஜிநாமா கடிதத்தில், “வாஷிங்டன் போஸ்ட்டில் இருந்து விலகுவதற்கு இதுவே சரியான நேரம் என்று கருதுகிறேன். தலைமைச் செயல் அதிகாரியாகவும் வெளியீட்டாளராகவும் எனது பதவிக்காலம் முழுவதும் எனக்கு ஆதரவளித்த ஜெஃப் பெசோஸுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

இந்த நிறுவனத்திற்கு இவரைவிடச் சிறந்த உரிமையாளர் இருக்க முடியாது. எனது பதவிக்காலத்தில் இந்தப் பத்திரிகையின் எதிர்காலத்தை உறுதி செய்ய பல கடினமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த முடிவுகளால், பல ஆண்டுகளுக்கு லட்சக்கணக்கான வாசகர்களுக்கு உயர்தரமான செய்திகளை வெளியிட முடியும். நன்றியுடன் வில்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.