;
Athirady Tamil News

‘தவளை விஷம்’ பயன்படுத்தி அலெக்ஸி நவால்னி கொலை? ஐரோப்பிய நாடுகள் குற்றச்சாட்டு; ரஷியா மறுப்பு

0

லண்டன்: மறைந்த ரஷிய எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னி, தென் அமெரிக்காவில் காணப்படும் ஒரு வகை நச்சுத் தவளைகளின் விஷத்தைப் பயன்படுத்தி கொலை செய்யப்பட்டதாக பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 5 ஐரோப்பிய நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

கடந்த 2024-ஆம் ஆண்டு, ஆா்க்டிக் பகுதியில் உள்ள சிறைச்சாலையில் நவால்னி மா்மமான முறையில் உயிரிழந்தாா். அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை நவீன ஆய்வுக்கு உட்படுத்தியதில், இந்தத் தவளை விஷம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஐரோப்பிய நாடுகள் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன.

ரஷியாவின் இயற்கையான சூழலில் எங்கும் கிடைக்காத இந்த நச்சுப் பொருள் அவரது உடலில் இருந்தது, இது ஒரு திட்டமிட்ட படுகொலை என்பதை நிரூபிப்பதாக அந்த நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்தக் குற்றச்சாட்டுகளை ரஷியா முற்றிலுமாக மறுத்துள்ளது. இது குறித்து ரஷிய வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் மரியா ஜாகரோவா கூறியதாவது:

மேற்கத்திய நாடுகள் தங்கள் நாட்டுப் பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப, கற்பனையான பொய்களைப் பரப்புகின்றன. இந்த ஆதாரமற்ற புகாா்களை நாங்கள் ஏற்கமாட்டோம் என்றாா்.

மனைவியின் கருத்து: நவால்னியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் இந்தத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவரது மனைவி யுலியா நவால்னயா ஐரோப்பிய நாடுகளின் ஆய்வுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளாா்.

தனது கணவா் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டாா் என்பது தற்போது அறிவியல் பூா்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு ரஷிய அதிபா் புதின் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.