;
Athirady Tamil News

கிளிநொச்சி ஆனைவிழுந்தான் புகையிரத நிலையம் மீண்டும் திறப்பு

0

கிளிநொச்சி – ஆனைவிழுந்தான் புகையிரத உப-நிலையம், தற்காலிக நிலைய அதிபர் ஒருவரின் நியமனத்துடன் மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்படவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையத்தில் கடமையாற்றி வந்த உப-நிலைய அதிபர் இராஜினாமா செய்ததை அடுத்து, புகையிரத திணைக்களம் அண்மையில் தற்காலிகமாக மூடத் தீர்மானித்திருந்தது. தற்போது அங்கு தற்காலிக நிலைய அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டு, பயணியர் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் சேவைகள்
கடந்த பல மாதங்களாக மூடப்பட்டுக் கிடந்த அக்குரல மற்றும் அன்ததொல ஆகிய புகையிரத உப-நிலையங்களின் சேவைகளும் மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப்படவுள்ளன. இன்றைய தினம் அல்லது நாளைய தினத்திற்குள் தற்காலிக நிலைய அதிபர்கள் அங்கு பணியமர்த்தப்பட்டு பொதுமக்கள் சேவைகள் ஆரம்பிக்கப்படும்.

இந்த தற்காலிக நியமனங்கள் குறித்து புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர ஜயசேகர சில முக்கிய விபரங்களை வெளியிட்டுள்ளார்.

நாட்டின் 25 உப-நிலையங்களுக்கு புதிய உப-நிலைய அதிபர்களை நியமிப்பதற்காக கடந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டது.

எனினும், ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையிலும் இந்த ஆட்சேர்ப்பு செயல்முறை இதுவரை நிறைவடையவில்லை. திணைக்களத்தின் உயர் நிர்வாகத்தின் திறமையின்மை காரணமாகவே இந்த நியமனங்கள் தாமதமாகி வருகின்றன.

இதன் விளைவாக, தற்போது பணியில் உள்ள நிலைய அதிபர்களைக் கொண்டு கூடுதல் செலவில் இந்த வெற்றிடங்களை நிரப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.