;
Athirady Tamil News

ஆப்கானிஸ்தானுடன் போர்..! ரஷியாவின் கோரிக்கையை ஏற்குமா பாகிஸ்தான்?

0

பாகிஸ்தானுக்கும் அதன் அண்டை நாடான ஆப்கானிஸ்தானுக்கும் இடையே எல்லைப்புற மோதல்கள் அதிகரித்து வந்ததன் வெளிபாடாக, இருதரப்புக்கும் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் பரஸ்பர பேச்சுவார்த்தை வழியாகப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண ரஷியா வலியுறுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆதரவுடன் நேட்டோ கூட்டமைப்பின் படைகள் கடந்த 2001-இல் காலடி எடுத்து வைத்த பிறகு ஆப்கனில் ஏற்கெனவே கோலோச்சி வந்த தாலிபான்கள் ஒடுக்கப்பட்டனர். நேட்டோ உதவியுடன் ஆப்கனில் புதிய அரசு அமைந்தது. இந்நிலையில், விரட்டப்பட்ட தாலிபான்களுக்குப் பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் அடைக்கலம் கிடைத்தது.

அதன்பின், ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-இல் நேட்டோ படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, தாலிபான் அமைப்பு ஆட்சிப் பொறுப்பேற்றுக்கொண்டது. அதனைத்தொடர்ந்து, தாலிபான் தலைமையிலான அரசு பாகிஸ்தானுடன் இணக்கமாகச் செயல்படவில்லை. பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரிக்கத் தொடங்கின.

பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியான ‘பலுசிஸ்தான்’ மாகாணத்தை சுதந்திரப் பகுதியாக அறிவிக்க தெஹ்ரீக்-ஏ-தாலிபான் (டிடிபி) போராடி வருகிறது. அவர்களுக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் அளித்து வருவதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது. இதனிடையே, கடந்த ஓராண்டில் பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ராணுவ வீரர்கள் உள்பட 1,200-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், 2022 முதல் இருநாட்டு எல்லையிலும் மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து வந்தன. கடந்த ஆண்டு அக்டோபரில் இரு நாட்டுக்கும் இடையே கடும் சண்டை மூண்டது. அதனைத்தொடர்ந்து, மத்தியஸ்த பேச்சுக்குப்பின் ஏற்பட்ட உடன்படிக்கையால் சண்டை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், எல்லையில் தாக்குதல்கள் மெல்ல அதிகரித்தன. இதனையடுத்து, பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பர குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வந்தன.

ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தான் எல்லையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக வியாழக்கிழமை(பிப். 26) இரவில் ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்களை நடத்தியது.

‘ஆபரேஷன் காஸாப் லில் ஹக்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ராணுவ நடவடிக்கையில் ஆப்கானிஸ்தானில் மொத்தம் 133 தாலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, பாகிஸ்தானின் தாக்குதல்களுக்கு எதிர்வினையாற்ற ஆப்கானிஸ்தானும் ஆயத்தமாகியிருப்பதால் இருநாட்டு எல்லையிலும் போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து, ஆப்கானிஸ்தானுடன் வெளிப்படையாகப் போர் என வெள்ளிக்கிழமை(பிப். 27) அறிவித்துள்ளார் பாகிஸ்தானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிஃப்.

இந்நிலையில், இர்நாட்டு அரசுகளும் சண்டையைத் தவிர்த்து தூதரக ரீதியாக பேச்சுவார்த்தை வழியாக தீர்வு காண ரஷியா வலியுறுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.