தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 (National Productivity Awards) போட்டியில் பொதுத்துறைப் பிரிவில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் முதலாம் இடத்தைப் பெற்று தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளது.
இதற்கான விருது வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்றது.
இதன்போது, யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கான முதலாம் இடத்திற்குரிய விருதினை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனிடம் வழங்கி வைத்தார்.
இதன்போது கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி உடனிருந்தார்.
மேலும், இந் நிகழ்வில் மேலதிக செயலர் , பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் அரசாங்க அதிபருடன் இணைந்து விருதினைப் பெற்றுக்கொண்டனர்.
இந்த விருந்தானது, யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் சிறந்த தலைமைத்துவம், ஒருங்கிணைந்த முயற்சி, அர்ப்பணிப்பான உழைப்பு மற்றும் மக்களுக்கான சிறந்த சேவை வழங்கலுக்குக் கிடைத்துள்ள தேசிய அங்கீகாரமாகும்.