;
Athirady Tamil News

அக்கரைப்பற்று உணவகங்களில் திடீர் சோதனைமனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுகள் அழிப்பு

0

கல்முனை பிராந்தியத்திலுள்ள உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிறுவனங்கள் ஊடாக பொதுமக்களுக்கு சுகாதாரமான உணவு கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், பிராந்தியத்திலுள்ள அனைத்து உணவு கையாளும் நிறுவனங்களும் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ், பிராந்தியத்திலுள்ள அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக நேற்று அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள ஹோட்டல்கள், உணவு கையாளும் நிறுவனங்கள், வீதியோர சிற்றுண்டி கடைகள் மற்றும் பழக்கடைகள் என்பன சோதனைக்குட்படுத்தப்பட்டன.

அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ரீ.ஜாரியா தலைமையில் நடைபெற்ற குறித்த சோதனை நடவடிக்கையில், பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லபீர், உணவு மருந்துகள் பரிசோதகர் எஸ்.ஜீவராஜா உட்பட அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுச் சுகாதார பரிசோதகர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற நிலையில் காணப்பட்ட காலாவதியான மற்றும் பழுதடைந்த உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதுடன் உணவு சமைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட சேதமடைந்த மற்றும் சுகாதாரமற்ற பாத்திரங்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன. சில உணவகங்கள் போதிய சுகாதார வசதிகளின்றி மிகவும் அசுத்தமான முறையில் இயங்கியமை கண்டறியப்பட்டது.

இதேவேளை சுகாதார விதிமுறைகளை மிக மோசமாக மீறிய ஹோட்டல் உரிமையாளர் ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அசுத்தமான நிலையில் காணப்பட்ட மேலும் இரண்டு நிறுவனங்களை தற்காலிகமாக மூடி திருத்தம் செய்து மீளத் திறக்குமாறு பணிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.