இலங்கையில் கணினி பயனாளர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்
இலங்கையில் கடந்த 2026ஆம் ஆண்டில் மாத்திரம் சுமார் 1.5 கோடி (14,960,244) உள்ளூர் மல்வேர் (Malware) பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக சர்வதேச சைபர் பாதுகாப்பு நிறுவனமான காஸ்பர்ஸ்கி (Kaspersky) தெரிவித்துள்ளது.
இணையம் ஊடாகப் பரவும் வைரஸ்களை விட, யுஎஸ்பி டிரைவ்கள் (USB Drives), குறுந்தகடுகள் (DVD) போன்ற சாதனங்கள் மூலமாகவே 37.4 சதவீதமான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
அதாவது, இலங்கையில் உள்ள கணினிப் பயனாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இவ்வாறான சாதனங்கள் மூலம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.
உள்ளூர் மல்வேர் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகும் நாடுகளின் பட்டியலில் இலங்கை உலக அளவில் 48ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
குறிப்பாக ‘வேர்ம்ஸ்’ (Worms) மற்றும் ‘ஃபைல் வைரஸ்கள்’ (File Viruses) கணினிகளில் ஊடுருவி, அமைதியான முறையில் முறைமைகளைச் செயலிழக்கச் செய்வதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் 2025 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு சராசரியாக 5 இலட்சம் தீங்கிழைக்கும் கோப்புகளை கெஸ்பர்ஸ்கி கண்டறிந்துள்ளது.
இது 2024ஆம் ஆண்டை விட 7 சதவீத அதிகரிப்பாகும். இதில் கடவுச்சொற்களைத் திருடும் மல்வேர்கள் (Password-stealing malware) 59 சதவீதத்தாலும், வேவுபார்க்கும் மல்வேர்கள் (Spyware) 51 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பணிப்பகுதிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பொதுவான சாதனங்களைப் பகிர்ந்து கொள்வோர் அதிக அவதானத்துடன் இருக்குமாறு கெஸ்பர்ஸ்கி அறிவுறுத்தியுள்ளது.
அடையாளம் தெரியாத யுஎஸ்பி சாதனங்களைத் தவிர்த்தல், மென்பொருட்களை அவ்வப்போது இற்றைப்படுத்துதல் (Update) மற்றும் பலமான பாதுகாப்பு மென்பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த அச்சுறுத்தல்களைத் தவிர்க்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.