தமிழக அரசியல் பம்பரமாகச் சுழல்கின்றது
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-இல் நடைபெறவுள்ளது; இதனால் அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிவிட்டது; இதனை இந்தியத் தேர்தல் ஆணையமே வெளியிட்டுள்ளது. மொத்தமாக 234 தொகுதிகள் உள்ள நிலையில், அவற்றில் சுமார் 4,500 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் தொடர்பான பணிகளைத் தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. முறையான மற்றும் நியாயமான முறையில் தேர்தலை நடத்துவதற்கான முனைப்பைக் கூர்மைப்படுத்துவதுடன், முறைகேடுகளைத் தவிர்ப்பதற்கான கண்காணிப்புகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. ஆளும்தரப்புக்குச் சாதகமாகச் செயல்படுவதைத் தடுக்கும் நோக்கில், அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்படுகின்றனர். குறிப்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர்.
வாக்குக்குப் பணம் கொடுக்கும் நடவடிக்கையைத் தடுக்கும் பொருட்டு, ‘ரெய்டு’ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. மாநிலமெங்கும் தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்; பிரசார செலவினங்கள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுகின்றன. மேலதிகமாக, இவை வீடியோவிலும் பதிவு செய்யப்படுகின்றன. இவ்வாறாக, வேட்பாளர்களின் செலவு ‘கண்கொத்திப் பாம்பாகத்’ தொடர்ச்சியாகக் கவனிக்கப்படுகின்றது.
சுமார் 75,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன; சுமார் 25,000 துணை இராணுவப் படையினர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படலாமென ஊகிக்கப்படுகிறது. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி மற்றும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு அணிகள் தேர்தல் களத்திலே உள்ளன.
மேலதிகமாக, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாசும், ஜெயலலிதாவின் தோழியாக அறியப்பட்ட சசிகலாவும் இணைந்து மேலுமொரு கூட்டணியை உருவாக்கியுள்ளனர். அஃது, உட்கட்சிப் பிளவுகளினால் தேர்தலில் போட்டியிடுகின்ற ஒரு தரப்பாகும். அதனுடைய இலக்கு வெற்றி பெறுவதல்ல; மாறாக, வாக்குகளைப் பிரிப்பதேயாகும்.
திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தலைமையிலான கூட்டணியிலே காங்கிரஸ், வைகோவின் மறுமலர்ச்சி திமுக (மதிமுக), தொல். திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் (விசிக), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தேமுதிக உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட தரப்புகள் உள்ளன. மொத்தமுள்ள 234 தொகுதிகளிலே, திமுக 164 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடுகின்றது; கூட்டணிக் கட்சிகளுக்கு 70 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. அதிலேகூட 12 தொகுதிகளில் திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்திலேயே கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுகின்றன. அந்த வகையில், உதயசூரியன் சின்னத்தில் 176 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
மறுபுறம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) தலைமையிலான கூட்டணியிலே பாரதிய ஜனதா கட்சி (பாஜக), பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி அணி, டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் ஜி.கே. வாசனின் தமிழ் மாநிலக் காங்கிரஸ் உள்ளிட்ட தரப்புகள் உள்ளன. அதிமுக 166 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடுகின்றது; எஞ்சிய 68 தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது. அதிலும் ஆறு தொகுதிகளில் அதிமுகவின் ‘இரட்டை இலை’ சின்னத்திலேயே கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுகின்றன. அந்த வகையில், இரட்டை இலைச் சின்னத்தில் 172 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
சீமானின் நாம் தமிழர் கட்சியும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகின்றன. தமிழகச் சமூகம் சாதிக்கட்டமைப்புகளைக் கொண்டதாகும்; அதனால், சாதி அடிப்படையிலேயே வேட்பாளர்கள் பெரும்பாலும் தெரிவு செய்யப்படுகின்றனர். சமூக நீதி குறித்து உரத்துக் குரலெழுப்புகின்ற திமுகவும் இதற்கு விதிவிலக்கல்ல. பட்டியலினம், பழங்குடியினர், ஆதிதிராவிடர், நாடார், வன்னியர், முதலியார், முக்குலத்தோர், யாதவர், கொங்கு வேளாள கவுண்டர், ரெட்டியார், வெள்ளாளர் எனச் சாதி அடிப்படையிலேயே திமுகவும் வேட்பாளர்களைத் தெரிவு செய்கின்றது. ஆனால், ‘சமூக நீதி’ என்னும் ஆலாபனையான சொற்றொடருக்குள் ஒளிந்துகொண்டு, பல்வேறு சமூகங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளித்துள்ளதாகக் கூறுகின்றது.
மறுபுறம், அதிமுக இவ்விடயத்தில் வெளிப்படையாகச் செயல்படுகின்றது; சாதி அடிப்படையில் வாக்களிக்கும் மனநிலையை அது ஏற்றுக்கொள்கின்றது. வார்த்தை ஜாலங்களுக்குள் ஒளிந்துகொள்ளாமல், கொங்கு மண்டலத்தில் கவுண்டர் சமூகத்தினருக்கும், வட தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கும், தென் தமிழ்நாட்டில் முக்குலத்தோர் மற்றும் நாடார் சமூகத்தினருக்கும் முக்கியத்துவம் அளித்து வேட்பாளர்களைத் தெரிவு செய்துள்ளது.
இவ்வாறான சூழலில், அரசியல் கட்சிகளின் பிரசாரங்கள் வேகமெடுக்கின்றன. பொதுக்கூட்டம், தெருப்பிரசாரம், ‘ரோட் ஷோ’ (Roadshow), நடைப்பயிற்சியின் ஊடாகப் பிரசாரம் மற்றும் சமூக வலைத்தள அலப்பறைகள் என ஒவ்வொரு கட்சியும் பல்வேறு உத்திகளைக் கையாளுகின்றன.
தேர்தல் பிரசாரங்களின் அமளிதுமளிகளுடன் போட்டி போட்டுக்கொண்டு கருத்துக் கணிப்புகளும் வெளியாகின்றன. அவற்றைச் சுயாதீனமான அமைப்புகள் வெளியிடுகின்றனவா அல்லது அரசியல் கட்சிகளே ஏற்பாடு செய்கின்றனவா என்னும் கேள்வியை எளிதில் கடந்து போக முடிவதில்லை. காரணம்: இந்திரன், சந்திரன் ‘ரேஞ்சுக்குக்’ கருத்துக் கணிப்புகள் கதை அளக்கின்றன; அவை ‘அம்புலிமாமா’ கதை கேட்கும் உணர்வையே ஏற்படுத்துகின்றன. இதனால், வாக்காளர்களைத் திசைதிருப்பும் உத்தி ‘வெள்ளிடைமலை’ ஆகின்றது.
தமக்குச் சாதகமான கருத்துக் கணிப்புகளை அரசியல் கட்சிகள் கொண்டாடுகின்றன; மற்றவற்றை நிராகரிக்கின்றன. சிலவற்றை ‘எதிர்த்தரப்பின் சதி’ எனப் புறணி பேசுகின்றன. ஐபிஎல் (IPL) போன்ற கிரிக்கெட் போட்டிகளில் ஓரணி வெற்றிநடை போடத் தொடங்கினால், மற்ற அணிகள் ஒதுங்கிவிடுவதில்லையே? அதேபோன்று, அனைத்துக் கட்சிகளும் ‘வெற்றி பெறுவோம்’ என்னும் நம்பிக்கையுடன் பிரசாரத்தில் ஈடுபடுகின்றன. இதனால், தமிழக அரசியல் பம்பரமாகச் சுழல்கின்றது.
“பிரிக்க முடியாது”: விவாகரத்து குறித்து மனந்திறந்த விஜய்
09 Apr 2026 – 0 – 1070
tamilmirror.lk
5 பேருக்கு மனைவியாக வாழ்ந்து விட்டேன்; கல்யாணமா?
08 Apr 2026 – 0 – 258மேலதிக செய்திகள்
HOMEHOME DELIVERYWNL HOMEARCHIVESFEEDBACKADVERTISING
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to ‘tamilmirror.lk’ Copyright © 2012 Wijeya Newspapers Ltd.