;
Athirady Tamil News

பிக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் என்ற ஜனாதிபதியின்யோசனை நாட்டை மேலும் பௌத்த மயமாக்கும் முயற்சி – போராட்டத்தில் தவிசாளர் நிரோஷ்

0

பௌத்தத்தின் பேரால் முன்னெடுக்கப்படும் பேரினவாதத்திற்குள் மட்டும் அரசு கட்டுப்பட்டிருக்கவில்லை. மேலாக பௌத்த துறவிகளின் பாரதூரமான குற்றங்களுக்கும் ஒழுக்கமின்மைகளுக்குள்ளும் கூட அரசு கட்டுப்பட்டுள்ளது என்பதை குற்றமிழைக்கும் பௌத்த துறவிகளை எவ்வாறு நீதிமன்றங்களில் நிறுத்துவது என்ற ஜனாதிபதியின் ஏக்கம் புலப்படுத்தவதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

யாழ் நகரில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை உயர் அதிகாரத்தில் உள்ள பௌத்த பிக்கு ஒருவரால் சிறுமி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமையை கண்டித்தும் அரச தலையீடுகள் இன்றி சிறுமிக்கு நீதி நிலைநாட்டப்படவேண்டும் என வலியுறுத்தி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும், நாங்கள் உண்மையான பௌத்தர்களையும் சிங்கள மக்களையும் மதிக்கின்றோம். ஆனால் இலங்கையில் பௌத்த உயர் பீடங்கள் பேரினவாதத்திற்குள் சிக்கிக் காணப்படுகின்றன. தேசிய இனப்பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம் இனவாதமிக்க பௌத்த பேரினவாத சக்திகளே. அனுராதபுரத்தில் சிறுவி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு குரலற்றவராக நீதியை கோரி நிற்கின்றார். நிலைமை இவ்வாறிருக்க ஜனாதிபதி எவ்வாறு பௌத்த மதகுருக்களை நீதிமன்றங்களில் நிறுத்துவது என ஜனாதிபதி வேதனைப்படுகின்றார். சட்டத்தின் முன் சகலரும் சமன் என்ற அடிப்படையில் நாட்டை அரசாங்கம் வழிநடத்த முன்வர வேண்டும்.

உள்நாட்டுச் சட்டங்களின் பிரகாரமும் ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமவாயங்களின் பிரகாரமும் சிறுவர்களை பாதுகாக்க அரசு கடமைப்பட்டுள்ளது. அப்படியிருக்க ஜனாதிபதி கூறும் பௌத்த துறவியர்களின் குற்றங்களுக்கு தனியான நீதிமன்றங்கள் என்பது நாட்டை மேலும் கீழ்நிலைக்குக் கொண்டு செல்லும் பிற்போக்கான முயற்சியாகும். நாம் மதச்சார்பற்ற அரசியலமைப்பினை கோரும் நிலையில,; பௌத்தத்திற்கு ஏற்கனவே அரசியலமைப்பில் காணப்படும் முன்னுரிமைகளில் இருந்து மேலும் ஒருபடி முன்சென்று குற்றங்களில் இருந்தும் விடுபாட்டினை அளிக்கும் முயற்சிளை திரைமறைவில் அரசாங்கம் மேற்கொள்ள முயற்சிக்கின்றது. இவ்வாறு வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

  1. news29052026
You might also like

Leave A Reply

Your email address will not be published.