;
Athirady Tamil News

இனி செயலி (App) மூலம் மணல் விநியோகம்! வடக்கு மாகாணத்தில் அறிமுகமாகும் நவீன கண்காணிப்பு முறை

0
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள குளங்களிலிருந்து மணலைக் கழுவி எடுத்து, உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக விற்பனை செய்யும் புதிய பொறிமுறையை விரைவில் உருவாக்கவும், வடக்கு மாகாணத்தின் மணல் விநியோக நடவடிக்கைகளைக் கையாளவும் கண்காணிக்கவும் தனியானதொரு செயலியை உருவாக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் மற்றும் தூய்மை இலங்கை செயலணியின் மாகாண இணைப்பாளரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர்  இ.சந்திரசேகரின் பிரதிநிதியுமான சு.கபிலன் ஆகியோரின் விசேட பங்கேற்புடன், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இக்கூட்டம் நேற்று (10.04.2026) வெள்ளிக்கிழமை மாலை முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர், முல்லைத்தீவு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை, சட்டவிரோத மீன்பிடி ஆகியவற்றுடன் சட்டவிரோதக் கனியவள அகழ்வும் பரவலாக இடம்பெறுகின்றது. குறிப்பாக, மணல் மற்றும் கிரவல் ஆகியன மிக மோசமான முறையில் சட்டவிரோதமாக அகழப்படுகின்றன. மணல் மாபியாக்கள் யார் என்பது எமக்குத் தெரியும், அவர்களுக்குத் துணைபோகும் அதிகாரிகளையும் நாம் அறிவோம். முல்லைத்தீவு மாவட்டத்தின் உள்ளூர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக வழங்கப்பட்ட அனுமதிகளைக் கூட முறைகேடாகப் பயன்படுத்தி, அதிக இலாபத்துக்காக யாழ்ப்பாணத்துக்கு மணல் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஒரு டிப்பர் லோர்ட் மணல் விற்பனை ஊடாக அண்ணளவாக 80,000 ரூபா வரை இலாபமீட்டுகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது, என்று சுட்டிக்காட்டினார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய  ஆளுநர், பொதுமக்கள் மணலைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். மணலுக்கான விலையைக் கட்டுப்படுத்தி, அதன் விநியோகச் சங்கிலியை உறுதிசெய்வதில் அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். சகல அரச திணைக்களங்களுக்கும் இதில் சமூகப் பொறுப்பு உள்ளது.
மணல் மாபியாக்களுடன் இணைந்து சில அதிகாரிகள் செயற்படுவதாக அறிய முடிகின்றது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு இனி ஒருபோதும் இடமளிக்க முடியாது. அவர்கள் எதிர்காலத்தில் தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும். எங்கு கனியவளங்களை அகழ முடியும், எவ்வளவு அளவுகளில் அகழ முடியும், விநியோகம் மற்றும் அனுமதிகள் தொடர்பான அனைத்து விடயங்களும் மாவட்டச் செயலாளர் தலைமையிலான மாவட்ட மட்டக் குழுவிலேயே இனி தீர்மானிக்கப்படும். இந்த அனுமதிகளில் உள்ளூராட்சி மன்றங்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். அவர்களால் உரிய முறையில் செயற்பட முடியாவிட்டால் மாத்திரமே மாற்று வழிகள் குறித்து ஆராயப்படும். இந்தப் புதிய பொறிமுறையை ஒழுங்கமைப்புக்குக் கொண்டுவர அனைவரும் ஒத்துழைக்க வேண்டும், என்று தெரிவித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற விரிவான கலந்துரையாடலையடுத்துப் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன:
மணல் அகழ்வு அனுமதிகளுக்கான முன்னுரிமையை உள்ளூராட்சி மன்றங்களுக்கே வழங்குவதென்றும், தனிநபர்களின் விண்ணப்பங்களை மாவட்டக் குழுவுக்குச் சமர்ப்பித்து அதன் ஊடாகத் தீர்மானம் எடுப்பதென்றும் முடிவெடுக்கப்பட்டது.
உள்ளூராட்சி மன்றங்களூடான மணல் விநியோகத்தைப் பாரவூர்தி உரிமையாளர் சங்கங்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட அமைப்புக்களின் ஊடாக மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது.
மணலைக் கழுவி எடுக்கும் செயன்முறைக்குப் பொருத்தமான குளங்கள் எவை என்பது தொடர்பான அறிக்கையை ஒரு வாரத்தினுள் சமர்ப்பிக்க நீர்ப்பாசனத் திணைக்களம் இணக்கம் தெரிவித்தது. அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் உரிய தரப்பினர் இணைந்து கள ஆய்வுகளை மேற்கொள்வதுடன், அதனைத் தொடர்ந்து மணலைக் கழுவி எடுப்பதற்கான கேள்விப்பத்திரங்களை கோரவும் தீர்மானிக்கப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த தூய்மை இலங்கை செயலணியின் மாகாண இணைப்பாளர் சு.கபிலன், வடக்கு மாகாணத்தின் மணல் விநியோக நடவடிக்கைகளைக் கையாளுவதற்காகத் தனியானதொரு செயலியை உருவாக்கத் தூய்மை இலங்கை செயலணி இணங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். இதன் மூலம் எதிர்காலத்தில் மணல் விநியோகம் தொடர்பான அனைத்து விடயங்களும் இலகுவான மற்றும் வெளிப்படையான கண்காணிப்புப் பொறிமுறைக்குள் கொண்டுவரப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநர், மாவட்டச் செயலாளர், தூய்மை இலங்கை செயலணியின் மாகாண இணைப்பாளர், சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், விசேட அதிரடிப் படையினர், உள்ளூராட்சி மன்றங்களின் கௌரவ தவிசாளர்கள், செயலாளர்கள், நீர்பாசனத் திணைக்கணப் பொறியியலாளர், வனவளத் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.